இரட்டை இலை சின்னம் முடங்குமா? - எடப்பாடி பழனிசாமி பதில்
"தி.மு.க., கூட்டணியில் இருந்து எத்தனை கட்சிகள் வெளியேறப் போகிறது எனப் பாருங்கள்" என மதுரையில் செய்தியாளர்களிடம் அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. உச்ச நீதிமன்றத்திலும் தீர்ப்பு வாங்கிவிட்டோம்; தேர்தல் ஆணையத்திலும் தீர்ப்பு வாங்கிவிட்டோம். சின்னத்தை முடக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும். கூட்டணி தொடர்பாக பொறுத்திருந்து பாருங்கள். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. தேதி அறிவித்த பின்னர் தான் கூட்டணி இறுதி வடிவம் பெறும்.
அதேபோல், பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம், மாநில கட்சிகளுக்கு இல்லை. 2014 தேர்தலில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி ஜெயலலிதா ஓட்டு கேட்கவில்லை. ஜனநாயக நாட்டில் யாரும் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேரலாம். எங்களுக்கு வாக்காளர்கள் தான் எஜமானர்கள். அவர்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.
இனியும் தி.மு.க., ஆட்சி தொடர்ந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது. சீட் கொடுப்பதால் மட்டுமே வாரிசு அரசியல் அல்ல. ஒரு குடும்பம், ஒரு கட்சியை நடத்தி வருவதே வாரிசு அரசியல் தான். தி.மு.க., என்பது கட்சி அல்ல, கார்ப்பரேட் நிறுவனம். எங்களைப் பொறுத்தவரை, ஒரு குடும்பத்தின் கைகளுக்குக் கட்சி சென்றுவிடக் கூடாது என்பது தான்.
அ.தி.மு.க.,வை பொறுத்தவரை என்னைப் போன்ற ஒரு சாதாரண தொண்டனும் உயர்ந்த பொறுப்புக்கு வர முடியும். அது அ.தி.மு.க.,வில் மட்டும்தான் முடியும். வேறு எந்தக் கட்சியிலும் அது சாத்தியம் இல்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
வாசகர் கருத்து