வேலைவாய்ப்பு பற்றி கட்சிகள் பேச வேண்டும்!

தமிழகத்தில், முதல் முறையாக ஓட்டளிக்க இருக்கும், எட்டு லட்சம் இளம் வாக்காளர்களையும் சேர்த்து கணக்கிட்டால், 1.5 கோடி வாக்காளர்கள், படித்து முடித்து, வேலைக்கு செல்லும் வயதில் இருக்கிறார்கள். இவர்களுக்கு, முதன்மையான பிரச்னை வேலைவாய்ப்பு தான்.

கொரோனா ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே, தமிழகத்தில், வேலையின்மை அதிகரிப்பு, முக்கிய பிரச்னையாக இருந்தது. தேசிய மாதிரி ஆய்வு விபரங்களில், அது வெளிப்படையாக தெரிந்தது. ஊரடங்கு, அந்த நிலைமையை மேலும் மோசமாக்கி விட்டது. உண்மையில், இளைஞர்களிடம் வேலையின்மை பிரச்னையை சுட்டிக்காட்டி பேச, எந்த புள்ளி விபரமும் தேவையில்லை. சமீபத்தில், எம்.டெக்., படித்து முடித்து, சென்னையில் ஆட்டோ ஓட்டும் இளைஞர் ஒருவரை சந்தித்தேன். அவர், வேலை தேடிக் கொண்டுதான் இருக்கிறார்; விரைவில், கிடைத்து விடும் என்றும் நம்புகிறார்.

அதே சமயத்தில், குடும்பத்தின் தேவைகளுக்காக, ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார். இது, ஒரு உதாரணம் மட்டுமே. தனது கல்விக்கும், உழைப்புக்கும் ஏற்ற கூலியை கொடுக்கிற வேலையே, நம் இளைஞர்களின் விருப்பமாக இருக்கிறது. குறைந்தபட்ச சட்டபாதுகாப்புள்ள சூழலில், நிரந்தரமான வேலைக்காக கனவு காண்கிறார்கள். ஆனால், நடைமுறையில், எந்த நிரந்தரமும், பணி பாதுகாப்பும் இல்லாத வேலையை கூட, தன் குடும்ப தேவைகளுக்காக, ஏற்று செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த சூழலின் காரணமாக, வேலையின்மையின் உண்மை நிலைமை, எந்த புள்ளி விபர கணக்கிலும் அடங்குவதில்லை. சரியாக, வெளிப்படுத்த முடிவதுமில்லை. அதனால் தான், வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, தி.மு.க.,வும், இடதுசாரிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளில், அதுபற்றி வாக்குறுதி அளித்துள்ளன. தமிழகத்தில் வசிப்போருக்கு தனியார் துறைகளில், 75 சதவீத இட ஒதுக்கீடு என்ற, முழக்கத்தை தி.மு.க., வைத்துள்ளது. நகர்ப்புறங்களுக்கும், 'வேலை உறுதி திட்டத்தை' விரிவாக்க வேண்டும் என்கிறார்கள் இடதுசாரிகள்.

இந்த இரண்டு முழக்கங்களும், இன்றைய களத்தில் விவாத பொருளாக வேண்டியவை. ஆனால், வேலைவாய்ப்பு பிரச்னை, இந்த வாக்குறுதிகளோடு முடிந்து விடுவதில்லை. தனியார் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கு, அரசு பல சலுகைகள் வழங்குகிறது. ஆனால், அப்படி உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள், மிக சொற்பமாகவே இருக்கின்றன. நிரந்தர தன்மை இல்லாமல், ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அமர்த்துகிறார்கள். இந்த சமயத்தில் தான், அரசு பணியில் உள்ளவர்களின் ஓய்வுபெறும் வயது, 60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

காலி பணியிடங்களை நிரப்புவதில் உள்ள சுணக்கம்; அரசு வேலை நியமனத்தில், மலிந்திருக்கும் முறைகேடுகள்; தனியார் துறையில் நிலவக்கூடிய குறைந்த கூலி மற்றும் நிரந்தரமற்ற நிலை; அரசு துறைகளை தனியார் மயப்படுத்துதல் என, பல முக்கியமான பிரச்னைகள், இந்த களத்தில் உரிய முக்கியத்துவம் பெறவில்லை. மேலும், பொருளாதார நெருக்கடியில் தள்ளப்பட்டிருக்கும் சூழலில், பொது செலவினங்களை அதிகப்படுத்துவதும், அரசு தலையீட்டில் வேலைவாய்ப்புகளை ஊக்கப்படுத்துவதும், மிக முக்கியமாக தேவைப்படும்

பொருளாதார நடவடிக்கை;
வேலை இழப்பு காலம் மற்றும் வேலையில்லா காலத்திற்கு என்று, உதவித்தொகை வழங்கும் திட்டங்கள், உரிய நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவையும் முக்கியத்துவம் பெறவில்லை.

ஆக, வேலைவாய்ப்பு மற்றும் வேலை பாதுகாப்பு பற்றி, நம் அரசியல் களத்தில், இன்னும்ஆழமான விவாதங்கள் தேவைப்படுகின்றன. அதேபோல, உள்நாட்டு உற்பத்தியான, ஜி.டி.பி., விபரம், எப்படி உரிய காலத்தில் வெளியிடப்பட்டு, அதன் மீது கவனம் குவிக்கப்படுகிறதோ, அதுபோல, வேலைவாய்ப்பு நிலைமை குறித்த துல்லியமான ஆய்வுகளை மேற்கொள்வதும், தீர்வு தேடுவதும் அவசியம்.

அரசியலில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் என்பது, எத்தனை இளம் வேட்பாளர்களைகளத்தில் நிறுத்துகிறோம் என்பதில் அல்ல. இளைஞர்களின் தேவைகள், அரசியல் களத்தில் உரிய கவனத்தை பெற வாய்ப்பு தருகிறோமா என்பதில் தான் வெளிப்பட வேண்டும்.

சிந்தன்

மார்க்சிஸ்ட் கம்யூ.,வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)