கூட்டணியில் இருந்தபோதே ஒன்றும் செய்யவில்லை: பா.ஜ.,வை விமர்சித்த பழனிசாமி
"எங்கள் ஆட்சியை இருண்ட ஆட்சி என ஸ்டாலின் கூறுகிறார். எங்கள் ஆட்சியில் நான் செய்த சாதனைகளை மேடையில் பேசுகிறேன். உங்களால் மக்கள் பெற்ற நன்மைகளை மேடையில் பேச முடியுமா?" என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
பொள்ளாச்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து பழனிசாமி பேசியதாவது:
ஜெயலலிதா மறைவுக்கு பின் ஸ்டாலின் அ.தி.மு.க.,வை உடைக்க பல ரூபங்களில் அவதாரம் எடுத்தார். அது எல்லாம் துாள் தூளாகிவிட்டது. அ.தி.மு.க.,வின் 30 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் பல ஏற்றங்களைக் கண்டது.
நாங்கள் சமைத்து வைத்த சாதத்தைப் போல சாப்பிடுவதைப் போல சிலர் பேசுகின்றனர். இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் வருவதற்கு அ.தி.மு.க., பாடுபட்டது.
பா.ஜ.,வில் புதிதாக ஒரு தலைவர் வந்துள்ளார். பிளைட்டில் ஏறும்போதும் இறங்கும் போதும் பேட்டி கொடுப்பார். பேட்டி கொடுப்பது மட்டும் தான் அவரின் வேலை. பேட்டி கொடுத்தே மக்களை ஈர்க்கப் பார்க்கிறார்.
தலைவர்கள் பல வழிகளில் மக்களை சந்திப்பார்கள். இவர் பேட்டி தந்து மக்களை நம்ப வைத்து ஓட்டுகளைப் பெற முயற்சிக்கிறார். இது தமிழக மக்களிடம் எடுபடாது. இங்கு உழைப்பவர்களுக்குத் தான் மரியாதை.
நான் நினைத்தால் தினம் தினம் பேட்டி தரலாம். அதனால் நாட்டு மக்களுக்கு என்ன பயன். எத்தனை தலைவர்கள் வந்தாலும் அ.தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியாது. இது தொண்டர்கள் நிறைந்த கட்சி. இங்கு தலைவன் என யாரையும் சொல்லும் கட்சி இல்லை.
இன்று மத்தியில் இருந்து பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்துவிட்டு போகிறார். அதனால் என்ன பயன். மக்களுக்கான திட்டங்களைக் கொடுத்தால் உபயோகமாக இருக்கும்.
விமானத்தில் இறங்கி சாலையில் பயணம் செல்கிறார்கள். இப்படி இருந்தால் மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா. இந்த ஏமாற்று வேலை தமிழகத்தில் எடுபடாது.
நாங்கள் 30 ஆண்டுகாலம் உழைத்ததால் மக்களுக்கு நன்மைகள் கிடைத்திருக்கிறது, இப்படிப்பட்ட சூழலில் யார் யாரோ வந்து ஏதேதோ பேசி மக்களைக் குழப்பி அந்த குழப்பத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். தமிழகத்தில். இது ஒருபோதும் எடுபடாது.
பா.ஜ., மாநில தலைவர், 'இந்த பகுதியில் அதை செய்வேன்... இதை செய்வேன்' என தினசரி பேட்டி கொடுத்து வருகிறார். ஆனைமலை-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றித் தருவாராம். இது மாநில அரசு தொடர்புடைய திட்டம். அவர் எப்படி நிறைவேற்றித் தருவார்?
நான் முதல்வராக இருந்த போது கேரள முதல்வரை சந்தித்துப் பேச்சு நடத்தினோம். பின் இருவரும் பேட்டி தந்தோம். கொரோனா வந்து ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் இதைக் கிடப்பில் போட்டுவிட்டனர்.
இந்த திட்டத்தை நிறைவேற்ற பாடுபட்டது அ.தி.மு.க., இன்று அந்த இரு மாநிலங்களிலும் வெவ்வேறு ஆட்சிகள் நடக்கின்றன. பா.ஜ., ஆட்சி நடக்கவில்லை.
தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. இந்த விவகாரத்தை மத்திய அரசு தலையிட்டு முடித்து வைக்கும் வாய்ப்புகளும் குறைவு.
காவிரி விவகாரத்தில் கூட உச்சநீதிமன்றத்தில் போராடி தீர்ப்பு பெற்றோம். உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் அதை நிறைவேற்ற பா.ஜ., தாமதம் செய்தது. அதைக் கண்டித்து அ.தி.மு.க., எம்.பி.,க்கள் பார்லிமென்ட்டில் குரல் கொடுத்து 22 நாட்கள் அவையை ஒத்திவைத்தனர்.
கூட்டணியில் இருந்த போதே இந்த பிரச்னையை பா.ஜ., தீர்க்கவில்லை. இப்போது தீர்த்துவிடுவார்களா. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நதிநீர் மேட்டூருக்கு வருகிறது. அதை இடையில் தடுக்கக் கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, அப்படி இருந்தும் மத்திய அரசு தலையிட்டு முடிவுக்கு கொண்டு வரவில்லை.
அப்போது கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சி இருந்தது. அம்மாநில முதல்வரும் அமைச்சர்களும், 'மேக்கேதாட்டுவில் அணை கட்டப்படும்' எனப் பேசி வந்தனர். அப்போதெல்லாம் அண்ணாமலை வாய் திறக்கவில்லை.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை யாரும் மீறக் கூடாதென்று பிரதமர் மோடி சொன்னாரா. அவர் சொல்லவில்லையே. தமிழகத்தின் பிரச்னையை மத்தியில் உள்ளவர்கள் கண்டுகொள்வதில்லை.
தமிழக விவசாயிகளைக் காக்கும் வகையில் காவிரி பிரச்னைக்கு பா.ஜ., தலைவர்கள் குரல் எழுப்ப மறுக்கின்றனர். ஆனால், ஆனைமலை-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவோம் என பொய்யான செய்தியை பேசி வருகிறார்கள்.
எங்கள் ஆட்சியை இருண்ட ஆட்சி என ஸ்டாலின் கூறுகிறார். எங்கள் ஆட்சியில் நான் செய்த சாதனைகளை மேடையில் பேசுகிறேன். உங்களால் மக்கள் பெற்ற நன்மைகளை மேடையில் பேச முடியுமா. என்னை அவதுாறாக பேசுவதே ஸ்டாலினின் தேர்தல் பிரசாரமாக இருக்கிறது..எந்த கஷ்டமும் இல்லாமல் பதவிக்கு வந்து ஸ்டாலின் இவ்வளவு பேசும் போது, உழைத்து வந்தவனுக்கு எவ்வளவு தெம்பு இருக்கும். முதல்வர் என்ற தகுதிக்கு ஏற்ப பேசுங்கள். இழிவான வார்த்தைகளை பேசாதீர்கள்.
அப்படி நீங்கள் பேசுவதைத் தொடர்ந்தால் எங்கள் தொண்டர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். அவர்கள் பேச ஆரம்பித்தால் உங்களால் தாக்குப் பிடிக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து