Advertisement

பா.ஜ., யாரை தழுவினாலும் அவர்கள் பஸ்பம் தான்: ப.சிதம்பரம் பேச்சு

"காங்கிரசின் ஆட்சியில் பா.ஜ., வங்கிக் கணக்கை முடக்கி, அக்கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்கு தொடுத்திருந்தால் இன்று மோடி பிரதமராக வந்திருக்க முடியாது" என, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

தென்சென்னை தி.மு.க., வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து ப.சிதம்பரம் பேசியதாவது:

பா.ஜ., யாரை தழுவினாலும் அவர்கள் பஸ்பம் ஆகிவிடுவார்கள். அந்த விளைவு தான் அ.தி.மு.க.,வுக்கு காத்திருக்கிறது. ஏற்கனவே, அந்தக் கட்சி 2,3 கூறுகளாக மாறியிருக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் இன்னும் மோசமாக மாறிவிடும்.

அனைத்துக் கட்சிகளையும் அழித்துவிட வேண்டும் என்பதே பா.ஜ.,வின் முக்கிய நோக்கம். அரசியில் கட்சிக்கு வருமான வரி கிடையாது. வருமானவரித்துறை காங்கிரசின் வங்கிக்கணக்கை முடக்குகிறது.இவர்களின் நோக்கம் கட்சிக் கணக்கை அடக்கி, கட்சியை ஒழிக்க வேண்டும் என்பதே.

நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகள் பா.ஜ.,வுடன் சேர்ந்து அழிந்துபோய்விட்டன. காங்கிரசை ஒழித்துவிட்டால் மற்ற மாநிலக் கட்சிகளை ஒழித்துவிடலாம் என பா.ஜ., திட்டமிடுகிறது.

ஒரு நாடு ஒரு தேர்தல் ஒரு கட்சி ஒரு தலைவர் என மோடியை வாழ்நாள் முழுதும் பிரதமராக வைத்திருக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஜனநாயகம் இன்று ஐ.சி.யூ.,வில் இருக்கிறது, இதைக் காக்க இது தான் கடைசி தேர்தல்.

தேர்தல் வந்தால் ஒப்பிட்டுப் பார்த்து தான் வாக்களிக்க வேண்டும். 10 ஆண்டுகால பா.ஜ., ஆட்சியில் நாட்டுக்கும் தமிழகத்துக்கும் என்ன செய்துள்ளனர்?

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் என பல திட்டங்களை காங்கிரஸ் கொண்டு வந்தது. அப்போது மத்திய ஆட்சியில் தி.மு.க.,வும் அங்கம் வகித்தது. எங்காவது பிரச்னை ஏற்பட்டால் அதற்கு தீர்வு காண மட்டுமே நாங்கள் ஆட்சியில் இருந்தோம்.

காங்கிரசின் ஆட்சியில் பா.ஜ., வங்கிக் கணக்கை முடக்கி, நிர்வாகிகள் மீது வழக்கு தொடுத்திருந்தால் இன்று மோடி பிரதமராக வந்திருக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 35 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் தற்போது 65 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மோடி ஆட்சி என்றாலே விலைவாசி உயர்வு குறித்த பயம் மக்களுக்கு வந்துவிட்டது. அப்படியிருக்கும் போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு மோடி ஓட்டு கேட்க வருகிறார்.

காங்கிரசின் ஆட்சியில் சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 145 டாலருக்கு விற்பனை ஆனது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலை 75 ரூபாய்க்கும் டீசலை லிட்டருக்கு 65 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இன்று கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 80 டாலராக குறைந்துவிட்டது. ஆனால், ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

மத்தியில் ஆட்சி மாற்றம் நடக்கவில்லை என்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் வருமா என்பதே கூட சந்தேகம் தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை கைது செய்து இருப்பதை பற்றி நாம் யாராவது சிந்தித்து பார்த்தோமா. சினிமாவில் கூட இப்படி பார்த்ததில்லை. நாவல்களில் கூட படித்ததில்லை. இதற்கு எந்த சட்டத்தில் இடம் உள்ளது?

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்