வாரிசு என பார்க்காதீர்கள், செயல்பாட்டை பாருங்கள்: அருண் நேரு
"களத்தில் இறங்கி வேலை செய்யும் தொண்டர்களும் நானும் ஒன்று தான். வேட்பாளர், தொண்டர்கள் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது" என, பெரம்பலூர் தி.மு.க., வேட்பாளர் அருண் நேரு தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் அருண் நேரு கூறியதாவது:
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பெரம்பலூரில் தான். இங்கு வசிப்பவர்களில் பலர் எனக்குத் தெரிந்தவர்கள். பெயர் பெரம்பலுாராக இருந்தாலும் அதன் பெரும்பகுதி திருச்சி மாவட்டத்தில் தான் இருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் செய்த நல்ல திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது. நாங்கள் பல திட்டங்களை செய்திருக்கிறோம். அதனால், எங்களுக்கு வாக்களியுங்கள் என கூறி மட்டுமே மக்களை அணுகுகிறோம்.
கட்சிக்காரர்களுக்கும் தொகுதி மக்களுக்கும் என்ன வேண்டும் என்ற நோக்கிலே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். களத்தில் இறங்கி வேலை செய்யும் தொண்டர்களும் நானும் ஒன்று தான். வேட்பாளர், தொண்டர்கள் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது.
எல்லாருக்கும் வாரிசு அரசியல் என்பது பொருந்தும். என்னுடைய செயல்பாட்டைப் பாருங்கள். இன்னார் மகன் செய்வார்... செய்ய முடியாது என்ற வரையறை எல்லாம் கிடையாது.
அண்ணாமலை, பா.ஜ., கட்சி தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் என்ன வேண்டுமானாலும் பேசலாம். பா.ஜ., வளர்ந்துவிட்டதா என்பது தேர்தல் முடிந்த உடன் தெரிந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து