2015ல் பா.ஜ., அரசே ஒப்புக் கொண்டது: கச்சத்தீவு குறித்து ப.சிதம்பரம்
"வாஜ்பாய் பிரதமராக இருந்த போதும் கூட தமிழக மீனவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லையா?" என, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை அரசுக்கு 1974ல் கச்சத்தீவை இந்திய அரசு தாரைவார்த்துக் கொடுத்ததால், இன்று வரையில் இலங்கை கடற்படையால் ஏராளமான தொல்லைகளுக்கு தமிழக மீனவர்கள் ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கச்சத்தீவு தொடர்பாக ஆர்.டி.ஐ., மூலம் பெறப்பட்ட தகவல்களை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று (மார்ச் 31) வெளியிட்டார்.
இதுதொடர்பாக, தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது:
கச்சத்தீவு விவகாரத்தில் வெளியாகும் தகவல்கள், தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகின்றன. தமிழக மக்களின் நலன்களுக்காக தி.மு.க., எதையும் செய்யவில்லை.
காங்கிரசும் திமுகவும் குடும்ப அமைப்புகள். அவர்களின் மகன், மகள்கள் முன்னேற வேண்டும் என்பதில் மட்டுமே அக்கறை கொள்வார்கள். கச்சத்தீவு மீதான அவர்களின் அக்கறையின்மையால் ஏழை மீனவர்களும் மீனவப் பெண்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
பழிக்கு பழி என்பதெல்லாம் பழைய ஆயுதம். கடந்த 2015 ஜனவரி 27ல் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஆர்.டி.ஐ., தகவலில், 'கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது' என இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
இப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சகமும் மாற்றிப் பேசுவது ஏன்? ஆர்.எஸ்.எஸ்.,- பா.ஜ.,வின் ஊதுகுழலாக ஜெய்சங்கர் செயல்படுகிறார்.
பல இலங்கை மீனவர்களை இந்தியா கைது செய்துள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் அரசு இலங்கையிடம் பேச்சு நடத்தி மீனவர்களை விடுவித்துள்ளது.
காங்கிரஸ்-தி.மு.க., வுக்கு எதிராக ஜெய்சங்கர் பேசுவதற்கு என்ன காரணம். வாஜ்பாய் பிரதமராக இருந்த போதும் கூட தமிழக மீனவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லையா. மோடியின் ஆட்சியில் கூட மீனவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லையா?
இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து