கச்சத்தீவு கைமாறியதில் என்ன நடந்தது: அண்ணாமலையின் ஆர்.டி.ஐ., தகவலை பகிர்ந்த மோடி
லோக்சபா தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், மீண்டும் கச்சத்தீவு விவகாரம் விவாதப் பொருளாக மாறியுள்ளது. "கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி அநாவசியமாக இலங்கைக்கு தாரைவார்த்தது என்ற புதிய உண்மை வெளிப்பட்டுள்ளது" என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் - இலங்கைக்கு இடையே அமைந்துள்ள கச்சத்தீவை காலம்காலமாக தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமாக இருந்த இந்தப் பகுதியை 1974ல் இலங்கை அரசின் ஒரு பகுதியாக அங்கீகரித்து பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்டார்.
இதன் காரணமாக, கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்கள் இருந்தனர். தொடர்ந்து, மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சுடுவது, வலைகளை அறுப்பது, கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வது என இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் தொடர்ந்தன.
இது குறித்து கடந்த 15ம் தேதி கன்னியாகுமரியில் பேசிய பிரதமர் மோடி, "கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க., செய்த பாவத்தால் தமிழக மீனவர்கள் இலங்கையிடம் இருந்து பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்" எனக் கூறியிருந்தார்.
இதனை மறுத்த முதல்வர் ஸ்டாலின், "தி.மு.க., அரசின் கடும் எதிர்ப்பை மீறியே கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை மக்கள் அறிவார்கள். ஒரு மாநில அரசு நாட்டின் ஒரு பகுதியை இன்னொரு நாட்டுக்குக் கொடுக்கும் என்று நம்பும் அளவுக்கு பிரதமர் மோடி அப்பாவியா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ,. மூலம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்குக் கிடைத்த தகவல்கள், விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " இலங்கை அரசிடம் கச்சத்தீவு சென்றது தொடர்பான தகவல்கள் என்னை ஆச்சர்யப்பட வைக்கின்றன. காங்கிரஸ் கட்சி, கச்சத்தீவை எப்படி அநாவசியமாக தாரைவார்த்தது என்ற புதிய உண்மை வெளிப்பட்டுள்ளது.
இது காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் நம்ப முடியாது என்று மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தும்விதமாக அமைந்துள்ளது. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை பலவீனப்படுத்தும் வகையில் கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "கச்சத்தீவு கைமாறிய விவரம் 1974ல் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றுவரை கச்சத்தீவு குறித்து உண்மைக்குப் புறம்பாக பதில் அளித்து வரும் தி.முக, இதற்கு பதில் அளிக்க வேண்டும். காங்கிரசுடன் சேர்ந்து கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டு பிறரை கேள்வி கேட்பது மிகவும் தவறு" என சாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து எனக்கு 2 ஆவணங்கள் கிடைத்தன. 1974ல் கச்சத்தீவு குறித்து கருணாநிதியும் காங்கிரசும் என்ன செய்தார்கள் என்ற ஆவணம் தான் அது.
அந்த ஆவணத்தை யார் படித்தாலும் ரத்தம் கொதிக்கும். கச்சத்தீவில் என்ன பிரச்னை. அதன் மீது இந்தியா மற்றும் இலங்கைக்கு உள்ள பார்வை என்ன என்பது முக்கியமானது.
இந்திய கடற்பரப்பில் இருந்து சில கி.மீ தொலைவில் உள்ள கச்சத் தீவு, இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. நாட்டின் எல்லைப்பரப்பை தீர்மானிக்கும் ஒரு தீவு. 1875ல் 1948 வரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் கச்சத்தீவு இருந்தது.
அங்கு நமது மீனவர்கள் முத்து எடுத்துள்ளனர். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பிறகே பிரச்னை தொடங்கியது. 1961ல் கச்சத்தீவு குறித்து காமன்வெல்த் செயலருக்கு நேரு, ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.
அதில், 'இந்த குட்டித் தீவுக்கு நான் எந்தவித மரியாதையும் கொடுக்கப் போவது கிடையாது. அந்த தீவை இன்னொருவருக்கு கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன். இதுபோன்ற சின்ன சின்ன பிரச்னைகள் தீர்க்கப்படடாமல் இருப்பது எனக்குப் பிடிக்காது' என்கிறார்.
ஆனால், கச்சத்தீவில் இந்தியாவுக்கு உரிமை உள்ளதாக அன்றைய அட்டர்னி ஜெனரல் எம்.சி.செடல்வாட் கூறியிருந்தார். ஆனால், நேருவின் முடிவு வேறானதாக இருந்தது. 1973ல் இந்திய-இலங்கை வெளியுறவுத் துறை செயலர்களின் பேச்சுவார்த்தை குறித்த தகவல் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டது.
1974ம் ஆண்டு தீவின் மீதான இந்தியாவின் உரிமையை கைவிட முடிவு செய்துள்ளதாக, மத்திய அரசு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் தெரிவித்தது. கச்சத்தீவை உரிமை கோர தங்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
ஆனால், ராமநாதபுரம் ராஜாவிடம் உள்ள உரிய ஆவணங்களை தமிழக அரசு காட்டவில்லை. இதனால் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. நாட்டில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட பிறகும் ராமநாதபுரம் ராஜா இலங்கைக்கு எந்த வரியும் கட்டாமல் கச்சத்தீவை நிர்வகித்து வந்தார்.
ராஜாவுக்கு கச்சத்தீவின் மீதான உரிமை இருந்தாலும் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என இந்திய வெளியுறவுத்துறை செயலர் தெரிவித்தார்.
இலங்கை அதிபர் சிறிமாவோ, டெல்லியில் இந்திராவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் தன்னிச்சையாகவே கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 74ல் இலங்கைக்கு கச்சத்தீவு வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து