பா.ஜ., வென்றால் ஜம்முவின் நிலை தான் தமிழகத்துக்கும்: ஸ்டாலின்

"தன் கையில் கிடைத்த அதிகாரத்தை பிரதமர் மோடி தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அழிக்க முயல்வது மட்டுமில்லாமல் நாட்டை நாசம் செய்துவிட்டார்" என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

லோக்சபா தேர்தல் மிக முக்கியமானது. இந்த தேர்தல் பாஜ.,வை வீழ்த்துவதற்காக மட்டும் என நினைத்துவிடக் கூடாது. இந்தியாவில் இனி ஜனநாயகம் இருக்க வேண்டுமா... வேண்டாமா என முடிவு செய்வதற்கான தேர்தல் இது.

இந்திய மாநிலங்களில் மக்களாட்சி, மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை ஆகியவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்றால் பா.ஜ., ஆட்சிக்கு வரக் கூடாது. மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சி இருக்காது, ஜனநாயக அமைப்பு முறை, நாடாளுமன்ற நடைமுறை போன்றவை இருக்காது. ஜம்மு காஷ்மீர் போல மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக மாற்றிவிடுவார்கள்.

ஜம்மு-காஷ்மீர்



நம் கண் முன்னே ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்தார்கள், அங்குள்ள மக்களின் விருப்பத்திற்காக மாறாக, அரசியில் கட்சி தலைவர்களை வீட்டில் சிறை வைத்தனர்.

அங்கே சட்டமன்றம் கிடையாது, காஷ்மீருக்கு 5 ஆண்டுகளாக தேர்தல் நடக்கவில்லை. இப்போதும் கூட அங்கு தேர்தலை அறிவிக்கவில்லை, இது தான் பா.ஜ.,வின் சர்வாதிகாரம். இதே நிலைமை நாளை தமிழகத்திற்கும் ஏற்படலாம். மீண்டும் பா.ஜ., வென்றால் எல்லா மாநிலங்களிலும் இதே நிலை ஏற்படும்.

பா.ஜ.,ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் கூட இந்த நிலைமை வரும். 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜ., நாட்டை மிக மோசமான வகையில் பாழ்படுத்தி நாட்டில் உள்ள அனைத்து கட்டமைப்புகளையும் சிதைத்து விட்டது.

தன் கையில் கிடைத்த அதிகாரத்தை பிரதமர் மோடி தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அழிக்க முயல்வது மட்டுமில்லாமல் நாட்டை நாசம் செய்துவிட்டார். மோடி ஆட்சி தொடர்வது தமிழகத்திற்கு நல்லதல்ல, இந்தியாவுக்கும் நல்லதல்ல.

இந்தியாவுக்கு எடுத்துக்காட்டாக பல திட்டங்களை நாம் செயல்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் உள்ள 1.15 கோடி மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் என செயல்படுத்தி வருகிறோம்.

விரைவில் ஆண்களுக்கும் 1000 ரூபாய் வழங்கக்கூடிய தமிழ்ப் புதல்வன் திட்டம் வரவுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் மாதம்தோறும் 900 ரூபாயை மிச்சம் செய்கின்றனர்.

'பகல் வேஷம்' பழனிசாமி



ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு ஒன்றும் செய்யாத பழனிசாமி, பா.ஜ., உடன் கூட்டணி சேர்ந்து மக்களுக்கு துரோகம் செய்தார். அவரிடம் அதிகாரம் இருந்த போது மத்திய அரசிடம் ஏதாவது திட்டங்களை பெற்றுத் தந்தாரா?

பா.ஜ.,வின் பாதம் தாங்கியாக இருந்த பழனிசாமி, இப்போது கவர்னரை நியமிப்பதற்கு முதல்வரிடம் ஆலோசனை செய்ய வேண்டும் என்கிறார். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொன்னதை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

ஆனால், தி.மு.க., அரசுக்கு குடைச்சல் தரும் கவர்னரை கண்டித்து ஒரு அறிக்கை கூட விடவில்லை. அரசுக்கு தொல்லை தருவதையே அன்றாட பணியாக வைத்திருக்கும் கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடுகிறாம்.

மோடி அரசு கொண்டு வந்த சி.ஏ.ஏ., சட்டத்தில் இலங்கை தமிழர்கள் சேர்க்கப்படவில்லை. அதனை ஆதரித்து அ.தி.மு.க., ஓட்டு போட்டதால் தான் அந்தச் சட்டம் இன்று வந்திருக்கிறது.

எய்ம்ஸ் திறப்பு விழாவில் பட்டனை மோடி அழுத்திய போது கை தட்டிய பழனிசாமி, அதனைக் கொண்டு வராததற்காக மத்திய அரசிடம் கேட்டாரா. எதையும் செய்யாமல் பகல் வேஷம் போடுகிறார்.

விவசாயிகள் பிரச்னை



2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கருப்பு பணத்தை மீட்டும் தலா 15 லட்சம் தருவேன் என மோடி சொன்னார். 15 ரூபாயாவது தந்தாரா. வருடத்திற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவேன் என்றார். கொடுத்தாரா?

மூன்று வேளான் சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டு, நானும் விவசாயி என பச்சைத் துண்டு போட்டு துரோகம் செய்தவர் தான் பழனிசாமி.

விவசாயிகளுக்கு வழங்கிய எந்த வாக்குறுதியையும் பா.ஜ., நிறைவேற்றவில்லை. பாகிஸ்தான் எல்லையைவிட மிக மோசமான சூழலை டில்லியில் ஏற்படுத்தி உள்ளனர். இதுவரை 4 விவசாயிகள் இறந்துள்ளனர். சொந்த நாட்டு விவசாயிகள் கூட பிரதமர் மோடியின் கண்களுக்கு எதிரியாக தெரிகின்றனர்.

காவிரி பிரச்னையில் பா.ஜ., - அ.தி.மு.க., செய்த துரோகத்தை மறக்க முடியாது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் கூடுதலாக 60 டிஎம்சி நீர் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சிறப்பு முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கைக் கூட அ.தி.மு.க., ஒழுங்காக நடத்தவில்லை.

உச்சநீதிமன்றம் தீர்பளித்ததும் காவிரி உரிமையில் 17.3 டி.எம்.சி.,யை விட்டுத் தந்தவர், பழனிசாமி. தமிழக மக்கள் நமக்கு வாக்களிக்கவில்லை என்ற நினைப்பில் மத்திய அரசு இதை நிறைவேற்றவில்லை. இதனை உணர்ந்து டெல்டா மக்கள் இவர்களைப் புறக்கனிக்க வேண்டும்.

என் மீது கோபம் ஏன்?



வெள்ள நிவாரண நிதியாக இதுவரை ஒரு சல்லிக்காசு கூட பா.ஜ., அரசு ஒதுக்கவில்லை. அவர்களுக்குத் தருவதற்கு மனம் இல்லை. தமிழகத்திற்கு எதையும் தராத மோடிக்கு தமிழக மக்கள் வாக்கையும் தர மாட்டார்கள்.

இது மோடிக்கும் தெரியும். அதனால் தான் தி.மு.க., மீது ஆத்திரத்தை கொட்டுகிறார். தி.மு.க., மீது அவருக்கு என் இவ்வளவு கோபம், இந்தியா முழுவதும் பா.ஜ.,வுக்கு எதிராக தனித்தனியாக இருந்த கட்சிகளை ஒருங்கிணைக்க நான் காரணமாக இருந்ததால் தான்.

பிரதமர் மோடியின் துாக்கத்தை இண்டியா கூட்டணி கலைத்துவிட்டது. அது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை, நாங்கள் எவ்வளேவோ பார்த்து விட்டோம்.

தமிழகத்தில் கவர்னர் பார்த்த வேலையை மோடி பார்க்க துவங்கி இருக்கிறார். தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் பா.ஜ., விரோதமானது. பா.ஜ.,வுக்கு போடக்கூடிய ஓட்டு, தமிழகத்துக்கு வைக்கக் கூடிய வேட்டு.

மாநிலத்தைக் கெடுத்தது அ.தி.மு.க., மாநிலத்தை கண்டுகொள்ளாதது பா.ஜ., இவர்கள் இருவரையும் தமிழக மக்கள் வீழ்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்