Advertisement

கவர்னரை விட, பா.ஜ., உறுப்பினர் பதவியே உயர்ந்தது: தமிழிசை நெகிழ்ச்சி

"இரண்டு ராஜ்பவன்களில் இருந்ததைவிட மக்கள் பவனான கமலாலயத்தில் இணைந்திருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது" என, முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.

தெலங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக இருந்த தமிழிசை, தனது பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்கள் பணி செய்வதற்காக பணியை ராஜினாமா செய்தேன். ஆண்டவரின் ஆசியும் ஆள்பவரின் ஆசியும் எனக்கு உள்ளது. இதைவிட வேறு என்ன வேண்டும்?" என்றார்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.,வின் தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு இன்று தமிழிசை வந்தார். அங்கு மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு பா.ஜ., உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

அப்போது அண்ணாமலை பேசியதாவது:

கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிகாரபூர்வமாக பா.ஜ.,வில் தமிழிசை இணைந்திருக்கிறார். ஆனால், கவர்னர் பதவியை அவர் ராஜினாமா செய்ததை சிலர் விமர்சனம் செய்கின்றனர். அவர்களுக்கு என்னுடைய பதில், உங்களுக்கு அதிகாரம் கிடைத்துவிட்டால் அங்கிருந்து நகர மாட்டீர்கள்.

நேற்று வரை இரு மாநில கவர்னராக இருந்த தமிழிசை, 18 கோடி உறுப்பினர்கள் உள்ள பா.ஜ.,வில் இணைந்துள்ளார். தெலங்கானா போன்ற பிரச்னைகள் உள்ள மாநிலத்தில் பணியாற்றிவிட்டு நிர்வாக அனுபவத்துடன் அவர் பா.ஜ.,வில் இணைந்துள்ளார்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

பா.ஜ.,வில் இணைந்த பின், செய்தியாளர்களிடம் தமிழிசை பேசியதாவது:

நான் கடினமான முடிவை எடுத்துள்ளதாக அண்ணாமலை கூறினார். அது கஷ்டமான முடிவு தான் என்றாலும் அதனை இஷ்டப்பட்டு எடுத்துள்ளேன். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று டெல்லி செல்லப்போகும் 400 எம்.பி.க்களில் ஒருவராக நான் இருக்க வேண்டும்.

இரண்டு ராஜ்பவன்களில் பணியாற்றியதைவிட மக்கள் பவனான கமலாலயத்தில் இன்று இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. கவர்னர் பதவியை விடவும் பா.ஜ., உறுப்பினர் என்ற பதவியை உயர்வாக பார்க்கிறேன். மத்தியில் மீண்டும் மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார்.

எந்த தொகுதியில் நான் நிற்க வேண்டும் என தலைமை விரும்புகிறதோ, அங்கு போட்டியிடுவேன். தமிழக பா.ஜ.,வில் வாரிசு அரசியல் என்பது இல்லை.

குமரி அனந்தன் என் தந்தையாக இருந்தாலும் அவர் பெயரை எந்த இடத்திலும் நான் பயன்படுத்தியது கிடையாது. தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்துள்ளது. மிகப் பெரிய கூட்டணியும் அமைந்துள்ளது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.

இவ்வாறு தமிழிசை பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்