தமிழகத்தில் இருந்து தான் 'இண்டி' கூட்டணிக்கு அழிவு : பிரதமர் மோடி
"கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வோம்" என பிரதமர் மோடி பேசினார்.
சேலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
சேலத்தில் கோட்டை மாரியம்மன் குடியிருக்கும் புண்ணிய இடத்துக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. தமிழகத்தில் பா.ஜ.,வுக்கும் எனக்கும் கிடைத்து வரும் மிகப் பெரிய ஆதரவை இந்தியாவே பார்த்துக் கொண்டிருக்கிறது.
நேற்று கோவையில் ஜனசமுத்திரத்தில் நீந்திக் கொண்டே பயணித்தேன். தழிகத்தில் பா.ஜ.,வுக்கும் என்.டி.ஏ., கூட்டணிக்கும் கிடைக்கும் ஆதரவை பார்த்து தி.மு.க.,வின் தூக்கமே தொலைந்து போவிட்டது.
400ஐ தாண்ட வேண்டும்
தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். ஏப்ரல் 19 அன்று விழும் ஒவ்வொரு ஓட்டுகளின் வாயிலாக மக்கள் மோடியாக மாற முடிவு செய்துவிட்டார்கள். தேர்தலில் வெற்றி எண்ணிக்கை என்பது 400ஐ தாண்ட வேண்டும்.
வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகம், விவசாயிகள் நலன், மீனவர்கள் பாதுகாப்பு ஆகியவற்றைக் காண 400க்கும் மேல் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் என்.டி.ஏ., கூட்டணி வலுவாக மாறியுள்ளது. பா.ம.க., தலைவர் ராமதாஸும் அன்புமணியும் தங்களின் திறமை, ஆற்றல், தொலைநோக்கு ஆகியவற்றைக் கொண்டு தமிழகத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல உள்ளனர்.
கண்கலங்கிய மோடி
என்.டி.ஏ., கூட்டணிக்கு பா.ம.க., தலைவர்களையும் தொண்டர்களையும் வரவேற்கிறேன். நான் பலமுறை சேலம் வந்திருக்கிறேன். இந்தமுறை வரும்போது எனக்கு பழைய நினைவுகள் வருகின்றன. 40, 50 வருடங்களுக்கு முன்பு கைலாஷ், மானசரோவர் யாத்திரை போகும்போது இதே ஊரை சேர்ந்த ரத்னவேல் என்பவர் வந்திருந்தார்.
இந்த ஊரைப் பற்றிய நல்ல விஷயங்களை அவர் என்னிடம் சொல்லிக் கொண்டே வந்தார். அதைக் கேட்டதில் இருந்து சேலத்தின் மீது எனக்கு மிகப் பெரிய ஈர்ப்பு உண்டானது. அவர், இங்கு உணவகத்தை நடத்திவந்தார். இப்போது அவர் இல்லை. ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.
சேலத்தை சேர்ந்த கே.என்.லட்சுமணனை நினைவுகூர்கிறேன். பாஜ.,வின் வளர்ச்சிக்கு தொடக்க காலத்தில் பாடுபட்டவர். அவசரநிலை காலத்தில் கட்சியை வளர்க்க பாடுபட்டவர். சேலத்தில் ஆடிட்டர் ரமேஷின் நினைவு வருகிறது. கட்சிக்காக தனது உயிரையே தியாகம் செய்து உழைத்த அந்த மனிதரை கொலை செய்துவிட்டனர். (பேசும்போது சற்று இடைவெளிவிட்டு பிரதமர் மோடி கண்கலங்கினார்)
இந்து மதத்துக்கு அவமதிப்பு
தொடக்கத்திலே காங்கிரஸ் - தி.மு.க., இண்டி கூட்டணியின் எண்ணம் வெளிப்பட்டுவிட்டது. மும்பையில் நடந்த முதல் பேரணியில் அவர்களின் உருவம் வெளிப்பட்டுவிட்டது. இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதை அழிப்பதையே தங்கள் நோக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இந்து மதத்தில் சக்தியை எப்படி வழிபடுவோம் என தமிழக மக்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கோட்டை மாரியம்மன் தூணில் ஓம் சக்தி என எழுதப்பட்டுள்ளது. காஞ்சி காமாட்சி சக்தி பீடம் இருகிறது. மதுரையில் காமாட்சி அம்மனை வழிபடுகிறார்கள். சக்திவாய்ந்த சமயபுரம் மாரியம்மன் இருக்கிறார்.
மாரியம்மனை சக்தியின் வடிவமாக வணங்குகிறோம். ஆனால், இண்டி கூட்டணி, இந்து மதத்தை தொடர்ந்து அவமதித்துக் கொண்டிருக்கிறது. இந்து மதத்துக்கு எதிராக ஒரு கருத்தியலை உருவாக்குகிறார்கள். தி.மு.க., -காங்கிரஸ் இண்டி கூட்டணி எந்த வேகத்தில் இந்து மதத்தை தாக்குகிறதோ, அதே வேகத்துடன் மாற்று மதத்தை தொடுவதில்லை.
தமிழகம் தண்டிக்கும்
வேறு எந்த மதத்துக்கு எதிராகவும் ஒரு சொல்லைக்கூட அவர்கள் பேசுவதில்லை. இந்து மதத்தை தொடர்ந்து அவமதித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதை எப்படி அனுமதிக்க முடியும். தமிழகத்தில் கலாசாரமான செங்கோலை பார்லிமென்டில் நிறுவ இண்டி கூட்டணி எதிர்ப்பு தெரிவிக்கிறது. இங்குள்ள சைவ ஆதினங்களுக்கு சொந்தமான செங்கோலை நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்தக் கூடாது என எதிர்த்தனர்.
இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். தமிழகத்தில் இருந்து தான் அவர்களுக்கு அழிவு தொடங்கப் போகிறது. சக்தியை பெண் வடிவில் வழிபட்டவர் பாரதி. பாரத அன்னை எனப் போற்றிவர் அவர். பாரதியின் வழியில் நானும் ஒரு சக்தி உபாசகன். சக்தியின் அடையாளத்தை அழிக்க நினைப்பவர்களை, ஏப்ரல் 19 அன்று தமிழகம் மிகக் கடுமையாக தண்டிப்பார்கள். இந்த உத்தரவாத்தை தமிழகம் தருகிறது.
பெண்களுக்கு பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. அவர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக இருந்து உதவி செய்கிறேன். உஜ்வாலா திட்டம், ஆயுஷ்மான் பாரத், முத்ரா கடன் உதவி திட்டம் என பெண்களுக்கு பலன் கிடைக்கிறது.
இன்றைக்கு எந்த பெண் சக்திக்காக திட்டங்களை செயல்படுத்தினோமோ, அந்த பெண் சக்திதான் எனக்கு பாதுகாப்பு கேடயமாக இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்கள் பெண்களை வந்தடையும். இது மோடியின் உத்தரவாதம்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவரை எப்படியெல்லாம் தி.மு.க.,வினர் இழிவுபடுத்தினார்கள். இன்றைக்கு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தால் எதிர்க்கிறார்கள். வரும் ஏப்ரல் 19ம் தேதியன்று மக்கள் வழங்கக் கூடிய தீர்ப்பு, தி.மு.க.,வுக்கு பாடமாக இருக்க வேண்டும்.
ஐந்தாவது தலைமுறை ஆட்சி
ஐந்தாவது தலைமுறையும் ஆட்சிக்கு வரவேண்டும் என தி.மு.க., நினைக்கிறது. 2ஜி ஊழல் மோசடி தேசத்தை தலைகுனிய வைத்தார்கள். அவர்களின் ஊழல்களைப் பற்றிப் பேச ஒருநாள் போதாது. தமிழகத்துக்கு பல லட்சம் கோடிகளை அனுப்புவதில் பா.ஜ., உறுதியாக இருக்கிறது. ஆனால், அதில் கொள்ளையடிக்கவே இங்குள்ள அரசு உறுதியாக இருக்கிறது.
பல இலக்குகளை நாம் அடைந்து கொண்டு இருக்கிறோம். நவீன உள்கட்டிமைப்புகள் மூலம் மிகப் பொரிய உயரத்தை தொட்டுக் கொண்டிருக்கிறோம். நம் தொழில்துறை, தன்னம்பிக்கையான பாரதத்தை முன்னெடுத்துச் செல்கிறது. தமிழகத்தையும் முன்னுக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.
சேலம் உருக்காலைக்கு 6 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நம் நாடு வலிமையான நாடாக மாறும். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வோம்.
உலகின் மிகப் பழமையான மொழி தமிழ். காலத்துக்கு முந்தைய மொழியான, தமிழின் பெருமை யாருக்கும் தெரியாது. தமிழ் மொழியின் பெருமையை உணர்ந்து, அதை உங்களிடம் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் என்னிடம் இருகிறது. அதற்கு வழியில்லாததால் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பேசத் தொடங்கியிருக்கிறேன். 'நமோ தமிழ்' ஆப் வாயிலாக உங்களிடம் நான் தமிழில் பேசுவதை கேட்கலாம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
வாசகர் கருத்து