பா.ஜ.,வின் வெற்றி திட்டங்கள்
லோக்சபா தேர்தலில், சத்தீஸ்கரில் பா.ஜ.,வின் வெற்றியை தீர்மானிக்கப்போவது அரசின் இரண்டு முக்கியமான திட்டங்கள் என்பதை முதல்வர் விஷ்ணுதியோ சாய் அரசு உறுதியாக நம்புகிறது.
அங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், 'மூதாட்டிகளை போற்றுவோம்' என்ற திட்டத்தையும், 'விவசாயிகள் முன்னேற்றம்' என்ற மற்றொரு திட்டத்தையும் பா.ஜ., அறிவித்தது.
'மூதாட்டியை போற்றுவோம்' திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள 70 லட்சம் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கான திட்டத்தில், நெல் கொள்முதல் விலையை, 950 ரூபாய் உயர்த்திய அரசு, ஒரு குவிண்டால் நெல்லை 3,100 ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் திட்டத்தை அறிவித்தது. இதன் வாயிலாக 25 லட்சம் விவசாயிகள் பலன் அடைவர்.
இந்த இரு திட்டங்களுக்கான முதல் தவணை தொகை, பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் சமீபத்தில் செலுத்தப்பட்டன.
வரும் நாட்களில் மேலும் பல வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தப்படும்போது, இத்திட்டத்துக்கு மக்கள் மத்தியில் மிகப் பெரிய ஆதரவு பெருகும் என, பா.ஜ., அரசு எதிர்பார்க்கிறது.
காங்கிரஸ் கட்சி, ஒரு குவிண்டால் நெல்லை 3,000 ரூபாய் என்ற விலையில், 20 குவிண்டால் கொள்முதல் செய்வதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதற்கு போட்டியாக, பா.ஜ., அரசு ஒரு குவிண்டால் 3,100 ரூபாய்க்கு 21 குவிண்டால் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்ததால், விவசாயிகளுக்கு 19,257 ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இது, காங்.,குக்கு வைக்கப்பட்ட மிகப் பெரிய, 'செக்' ஆக பார்க்கப்படுகிறது.
சத்தீஸ்கரில் கடந்த 2018ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது, ஒரு குவிண்டால் நெல் 2,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என, காங்., அறிவித்தது.
அதற்கு போட்டியாக கொள்முதல் விலையை அதிகரிக்க, மோடி தலைமையிலான மத்திய அரசு அப்போது ஒப்புக்கொள்ளவில்லை. இது, தேர்தலில் எதிரொலித்து காங்., வெற்றி அடைந்தது.
இந்த தவறை உணர்ந்த பா.ஜ., தலைமை இந்த முறை விழித்துக் கொண்டுள்ளது. எனவே தான், சட்டசபை தேர்தலின் போதே, லோக்சபா தேர்தலையும் மனதில் வைத்து அதிரடியாக சலுகைகளை அறிவித்தது.
அதை தாமதப்படுத்தாமல், பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்த துவங்கி இருப்பது, சத்தீஸ்கரில் உள்ள 11 லோக்சபா தொகுதிகளையும் பா.ஜ.,வுக்கு பெற்றுத்தரும் என, அக்கட்சியினர் உறுதியாக நம்புகின்றனர்.
வாசகர் கருத்து