ஆண்டவன் அருள்... ஆள்பவரின் அனுமதி : ராஜினாமா குறித்து தமிழிசை
கவர்னர் பதவியில் இருந்து விலகியது குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம் அளித்துள்ளார். "மக்கள் பணிக்காக விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னர் ஆகிய பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக, தமிழிசை சௌந்தர்ராஜன் அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கவர்னர் பதவியில் இருந்து விலகி, லோக்சபா தேர்தலில் தமிழிசை போட்டியிடலாம். புதுச்சேரி அல்லது தமிழகத்தில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என தகவல் பரவியது. இந்நிலையில், கவர்னர் பதவியில் இருந்து விலகியது குறித்து தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
தமிழிசை கூறியதாவது:
இரு மாநிலங்களிலும் நான் மக்கள் கவர்னராக இருந்தேன். மக்கள் பணிசெய்வதற்காக என் விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்துள்ளேன். எனது ராஜினாமா முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தெரிவிப்பேன்.
கடந்த 4 ஆண்டுகளில் பல அனுபவங்களைக் கற்றுள்ளேன். தேர்தலை சந்தித்தது, அரசியல்வாதிகளை சந்தித்தது என எனக்குக் கிடைத்த அனுபவங்கள் அதிகம். தற்போது நான் நேரடியாக அரசியலுக்கு வருகிறேன்.
தமிழகத்தில் எனக்கு நிச்சயம் ஆதரவு கிடைக்கும். கவர்னர் பதவியை விட்டுவிட்டு மீண்டும் அரசியலுக்கு வருகிறேன். நிச்சயம், மக்கள் என்னை புரிந்து கொள்வார்கள். ஆண்டவனின் அருளும் கிடைத்துள்ளது, ஆண்டு கொண்டிருப்பவரின் அனுமதியும் எனக்கு கிடைத்துள்ளது. இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்?
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து