'சக்தி'யை முன்வைத்த ராகுல்... சவாலை ஏற்ற மோடி : விறுவிறுப்பாகும் தேர்தல் களம்
"சக்தியை அழிப்பதாக கூறியுள்ள இண்டி கூட்டணியின் சவாலை நான் ஏற்கிறேன். நாட்டின் சகோதரிகளை பாதுகாக்க நான் உயிரையும் தியாகம் செய்வேன்" என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி நேற்று மும்பையில் நிறைவு செய்தார். பின், இண்டியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:
வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், விவசாயிகள் பிரச்னை என அனைத்தும் மூடி மறைக்கப்படுகிறது. ஊடகங்களும் சோசியல் மீடியாக்களும் நாட்டின் கைகளில் இல்லை. நாட்டு மக்களின் கவனத்தைப் பெற நான்காயிரம் கி.மீட்டர்கள் நடந்தோம்.
மோடியின் ஆன்மா, வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளது. மஹாராஷ்டிராவை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் என் தாயிடம் பேசும்போது, 'இந்த அதிகாரத்துக்கு எதிராக என்னால் போராட முடியவில்லை' எனக் கூறி கதறி அழுதார்.
ஹிந்து மதத்தில் சக்தி என்றொரு சொல் உள்ளது. நாங்கள் பா.ஜ., என்ற சக்திக்கு எதிராக போராடுகிறோம். மோடி என்ற தனிநபரை எதிர்த்து அல்ல. இந்த சக்தி அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., போன்ற அமைப்புகளிடம் உள்ளன.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
ராகுலின் பேச்சுக்கு இன்று தெலங்கானாவின் ஜக்தியாலில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பதில் கொடுத்துள்ளார். அவர் பேசும்போது, "ஒவ்வொரு தாயும் ஒவ்வொரு மகளும் சக்தியின் வடிவம். சந்திரயான் வெற்றியை இந்த தேசம், சிவசக்திக்கு அர்ப்பணித்தது. ஆனால், எதிர்க்கட்சிகளோ சக்தியை அழிப்பதைப் பற்றி பேசுகின்றன.
சக்தியை அழிப்பது தான் தங்கள் இலக்கு என இண்டி கூட்டணி கட்சிகள் பேசியுள்ளன. நான் பாரத மாதாவை நேசிப்பவன். சக்தியை அழிப்பதாக கூறியுள்ள இண்டி கூட்டணியின் சவாலை நான் ஏற்கிறேன்.
நாட்டின் சகோதரிகளை பாதுகாக்க நான் உயிரையும் தியாகம் செய்வேன். வரும் லோக்சபா தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பா.ஜ., வெல்லும் என்கின்றனர். இந்த தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு மோடி பேசினார்.
ராகுல் சொன்ன விளக்கம்:
பிரதமர் மோடியின் கருத்து குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மோடிக்கு என்னுடைய வார்த்தைககள் பிடிப்பதில்லை. அவருக்கு நான் ஒரு உண்மையை தெரிவித்துள்ளேன் என்பதால் அதனை திரித்து அர்த்தத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்.
நான் சொன்ன சக்தி என்பது, போராடும் சக்தி. சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம், அரசியல் அமைப்பு சட்டம் என அனைத்தையும் தங்கள் பிடியில் அவர்கள் வைத்துள்ளனர்.
இந்திய வங்கிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மோடி தள்ளுபடி செய்கிறார். ஆனால், சில ஆயிரம் பணம் இல்லாமல் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார்.
மோடி எந்தவகையான மத சக்தியும் அல்ல. அவர் அநீதி, ஊழல் மற்றும் பொய்யின் சக்தியாக இருக்கிறார். அதனால் தான் அவருக்கு எதிராக நான் குரல் எழுப்பும்போதெல்லாம் கொதிப்படைந்து பேசுகிறார்.
வாசகர் கருத்து