பா.ஜ.,வில் பனிப்போர் மோடி வந்த பின் முடியும்
பிரதமர் மோடி, கோவையில் இன்று, 'ரோட் ஷோ' வாயிலாக பிரசாரம் மேற்கொள்கிறார். அதற்கு பின், தமிழக பா.ஜ., நிர்வாகிகள் இடையே நிலவும் பனிப்போர் முடிவுக்கு வரும் என, அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்ற பின் அண்ணாமலை, மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று, கட்சியை வளர்த்து வருகிறார்.
அதேசமயம் அவர், கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகளின் ஆலோசனையை கேட்பதில்லை என்று சிலர், பா.ஜ., மேலிட தலைவர்களுக்கு புகார் அனுப்பி வருகின்றனர். குறிப்பாக, கோவையில் பா.ஜ.,வுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. அதற்கு ஏற்ப, அங்கு தான் அதிகளவில் கோஷ்டிகளும் உள்ளன.
இதனால், கோவை கட்சி விவகாரம் தொடர்பாக அண்ணாமலையிடம், மாவட்ட நிர்வாகிகள் புகார் அளித்தால், 'கோவை விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன்' என்று அண்ணாமலை கூறி விடுவதாக, கட்சியினரே கூறுகின்றனர்.
இந்த சூழலில், பிரதமர் மோடி, கோவையில் வாகனத்தில், 2 கி.மீ., மேல் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அனைத்து தலைவர்களும் முன்னின்று கவனிக்கின்றனர்.
எனவே, பிரதமரின் கோவை வருகைக்கு பின், தமிழக பா.ஜ., நிர்வாகிகள் இடையே உள்ள பனிப்போர் முடிவுக்கு வரும் என, நம்பப்படுகிறது.
அவர்கள், அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வளர்ப்பர்.
இவ்வாறு பா.ஜ., வட்டாரங்கள் கூறின.
வாசகர் கருத்து