ஓட்டு கேட்டு மட்டும் பிரதமர் மோடி வரலாமா : ஸ்டாலின் கேள்வி

" தமிழகத்துக்கு ஏன் நிதி தரவில்லை என்று கேட்டால், எங்களை பிரிவினைவாதி என்கிறார்கள்" என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
வடசென்னை வளர்ச்சி திட்ட விரிவாக்க பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
என்னை எம்.எல்.ஏ.,வாகவும் மேயராகவும் துணை முதல்வராகவும் இப்போது முதல்வராகவும் ஆக்கியது, வடசென்னை தான். சென்னைக்கு என நாள்தோறும் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அடுத்த 3 ஆண்டுகளில் 200 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
கழிவுநீர், திடக்கழிவு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. சென்னைக்கான வளர்ச்சி திட்டங்களை நானே தொடர்ந்து கண்காணிப்பேன். சென்னையை நவீனமயப்படுத்துவதில் தி.மு.க.,வுக்கு முக்கியமான பங்கு உள்ளது.
தமிழகத்துக்குத் தேவையான நிதியை கேட்டால் பிரிவினைவாதி என்கிறார்கள். நாங்கள் பிரிவினையை பேசவில்லை. இந்தியாவின் வளர்ச்சிக்காக தி.மு.க., குரல் கொடுத்து வருகிறது. தேசபக்தியை பற்றி தி.மு.க.,வுக்கு பாடம் எடுக்க வேண்டிய தேவை இல்லை.
ஒரு கண்ணில் வெண்ணெயும் மறுகண்ணில் சுண்ணாம்பும் ஏன் என்று தான் கேட்கிறோம். வரியாக ஒரு ரூபாயை கொடுத்தால், 29 பைசாவை கொடுக்கிறார்கள். அதையும் பலமுறை வலியுறுத்திய பிறகே கொடுக்கிறார்கள். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி கேட்டு 3 ஆண்டுகள் ஆகியும் கொடுக்கவில்லை.
தமிழகத்துக்கு பிரதமர் மோடி ஒன்றுமே செய்யவில்லை. சென்னை, தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளின் போது நேரில் வராத மோடி, நாளை ஓட்டு கேட்டு கன்னியாகுமரிக்கு வருவது மட்டும் நியாயமா?
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
வாசகர் கருத்து