நெல்லை, தூத்துக்குடிக்கு ' பை பை' : எடுபடாத தமிழிசை முயற்சிகள்
தமிழக பா.ஜ., தலைவராக சிறப்பாக செயல்பட்டவர் தமிழிசை. 2019 லோக்சபா தேர்தலில் துாத்துக்குடியில் போட்டியிட்டார். அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தும், தி.மு.க., வேட்பாளர் கனிமொழியை விட 3 லட்சத்து 47,000 ஓட்டுகள் குறைவாக பெற்று தோல்வியடைந்தார். கனிமொழி 56.77 சதவீத ஓட்டுகளையும், தமிழிசை 21.77 சதவீத ஓட்டுகளையும் பெற்றனர்.
அதன்பின், அவர் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான கவர்னராக நியமிக்கப்பட்டார். ஆனாலும், அவருக்கு அரசியல் மீதான ஆர்வம் கொஞ்சம்கூட குறையவில்லை. அதனால், மீண்டும் அரசியலுக்கு வந்து, தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்தார். அதை தன்னுடைய கருத்தாக தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.
இந்நிலையில், அவர் துாத்துக்குடியில் மீண்டும் போட்டியிடலாம் என்ற செய்தி பரவியது. ஆனால், அவர் ஏற்கனவே தோல்வியடைந்த தொகுதியிலேயே போட்டியிட விரும்பவில்லை. அதனால், நிகழ்ச்சிகளுக்காகக் கூட துாத்துக்குடிபக்கம் செல்லாமல்ஒதுங்கினார்.
ஆனால், நெல்லையில் போட்டியிட விரும்பிய அவர், அங்கு நடந்த நாடார் சங்க நிகழ்வுகள், பனை பொருள் மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்றார். அங்கு நயினார் நாகேந்திரனுக்கு 'சீட்' உறுதியானதால், கடந்த ஒரு மாதமாக நெல்லை பக்கமும் செல்வதை தமிழிசை தவிர்த்துள்ளார்.
அவருக்கு வாய்ப்புள்ள மேலும் மூன்று தொகுதிகள் கன்னியாகுமரி, விருதுநகர், புதுச்சேரி. கன்னியாகுமரியில் அவரது சித்தப்பா மறைந்த எம்.பி., வசந்தகுமார் மகன் விஜய்வசந்த், காங்., சார்பில் போட்டியிடுவதால், ஒரே குடும்பத்தில் இருவர் போட்டியிடுவதை கட்சிகள் விரும்பாது.
விருதுநகரில் போட்டியிட தமிழிசையே ஆர்வம் காட்டவில்லை. மீதமுள்ள ஒரு தொகுதி புதுச்சேரி. அங்கு ஒருவேளை சீட் கிடைத்தாலும், வெற்றி அத்தனை எளிதல்ல. அதனால் இந்த முறை தமிழிசைக்கு எந்தத் தொகுதியில் சீட் கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அதோடு, கவர்னராக இருக்கும் தனக்கு, அரசியல் ரீதியில் தேர்தலை சந்திக்க கட்சித் தலைமை வாய்ப்பளிக்குமா என்ற குழப்பத்திலும்தமிழிசை ஆழ்ந்திருப்பதாக, தமிழிசையின் பா.ஜ.,ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
வாசகர் கருத்து