அரசின் திட்டங்களுக்கு இண்டியா கூட்டணி முட்டுக்கட்டை: பிரதமர் மோடி
''மத்திய அரசின் திட்டங்களுக்கு 'இண்டியா' கூட்டணி கட்சியினர் முட்டுக்கட்டையாக உள்ளனர்'', என பிரதமர் மோடி பேசினார்.
மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பராசத் பகுதியில் நடந்த மகளிர் பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சிக்காக பா.ஜ., கடந்த 10ஆண்டுகளாக கடுமையாக உழைத்து வருகிறது. பொதுபோக்குவரத்தை நவீனப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.தே.ஜ., கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதை அறிந்து கொண்ட இண்டியா ' கூட்டணி கட்சிகள் பதற்றம் அடைந்துள்ளன.
இதனால், எனது எனது குடும்பத்தை விமர்சிக்கும் பணியை 'இண்டியா' கூட்டணி துவக்கிவிட்டது. எனது குடும்பத்தினர் குறித்து கேள்வி கேட்பவர்களுக்கு நான் அளிக்கும் பதில், நாட்டு மக்களே எனது குடும்பத்தினர்.
எனக்கு பிரச்னை வரும் போது எல்லாம், தாயார்களும், சகோதரிகளும் என்னைச் சுற்றி அரணாக நிற்கின்றனர்.மேற்கு வங்கத்தின் பெண்கள் எனது குடும்பத்தின் ஒரு அங்கத்தினர். அவர்கள் எனது தாயாகவும், சகோதரிகளாகவும் பார்க்கிறேன்.
எனக்கு குடும்பம் இல்லாததால், வாரிசுகளை பற்றி விமர்சிக்கிறேன் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களை திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் கட்டவிழ்த்து விட்டு உள்ளனர்.
அக்கட்சி பெரிய பாவத்தை செய்து வருகிறது. குற்றவாளிகளை மம்தா அரசு பாதுகாத்து வருகிறது. சந்தேஷ்காலியில் நடந்த நிகழ்வை கண்டு அனைவரும் வெட்கப்பட வேண்டும்.இச்சம்பவத்திற்கு காரணமான வில்லனை பாதுகாப்பதில் மம்தா அரசு மும்முரமாக உள்ளது. அங்கு நடந்த சம்பவத்தை பார்த்து பெண்கள் கோபத்துடன் உள்ளனர்.
இதன் சூறாவளி மாநிலம் முழுவதும் வீசுகிறது. பெண்களுக்கு மம்தா அரசால் பாதுகாப்பு வழங்க முடியாது.பெண்களுக்கான அதிகாரம் மற்றும் அவர்களின் பாதுகாப்பே மோடியின் உத்தரவாதம். மத்திய அரசின் திட்டங்களுக்கு 'இண்டியா' கூட்டணி கட்சியினர் முட்டுக்கட்டையாக உள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
வாசகர் கருத்து