அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி உறுதி: தொகுதிப் பங்கீடு எப்போது?
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக தே.மு.தி.க., அவைத் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வை இணைவது தொடர்பாக இரு கட்சிகளின் நிர்வாகிகளும் பேசி வந்தனர். தொடர்ந்து, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரேமலதாவின் இல்லத்தில் கூட்டணி பேச்சு குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் பேசினர்.
இது குறித்துப் பேசிய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி, "பொதுச் செயலர் பழனிசாமி உத்தரவின் பேரில் பிரேமலதாவை சந்தித்துப் பேசினோம். வரும் நாள்களில் இரு தரப்பிலும் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். நாங்கள் நேரில் வந்து சந்தித்ததை வைத்து கூட்டணி முடிவாகிவிட்டதா என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்" என்றார்.
இரு தரப்பிலும் நடந்த பேச்சுவார்த்தையில், நான்கு இடங்களையும் ஒரு ராஜ்யசபா தொகுதியையும் தே.மு.தி.க., தலைமை கேட்பதாக தகவல்கள் வெளியானது. இதில், கள்ளக்குறிச்சி தொகுதியில் பிரேமலதா களமிறங்கலாம் எனவும் பேசப்பட்டது. இது குறித்து தே.மு.தி.க., தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
அதேநேரம், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு எல்.கே.சுதீஷ், அவைத் தலைவர் இளங்கோவன் உள்பட 4 பேர் கொண்ட குழுவை அமைத்து தே.மு.தி.க., தரப்பில் அறிக்கை ஒன்று வெளியானது.
இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் தே.மு.தி.க., நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், சுமுக உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க உடனான பேச்சு குறித்து தே.மு.தி.க., அவைத் தலைவர் இளங்கோவன் கூறுகையில், "லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம். அ.தி.மு.க., நிர்வாகிகள் உடன் பரஸ்பரத்துடனும் நட்பு உணர்வுடனும் பேச்சு நடத்தினோம். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் தெரிவிக்கப்படும்" என்றார்.
வாசகர் கருத்து