அடுத்த 25 ஆண்டு கால திட்டத்துடன் தேர்தலை எதிர்கொள்வோம்: அமித்ஷா
"காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரத்தில் பலவீனமாக இருந்த நாட்டை இன்று மோடி உயர்ந்த நிலைக்கு முன்னேற்றி உள்ளார்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
மும்பையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:
லோக்சபா தேர்தல் சில மாதங்களில் நடக்க உள்ளது. இந்த தேர்தல் அடுத்த 25 ஆண்டுகளை தீர்மானிக்கும் தேர்தலாக இருக்கும். பிரதமர் மோடி தலைமையிலான நம் நாடு தன்னம்பிக்கை தற்சார்பு கொண்டதாக மாறி உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயலற்ற அரசாக இருந்தது. அப்போது பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. ஆனால், பாஜ., ஆட்சியில் 5 சதவீதத்திற்கும் கீழ் குறைக்கப்பட்டுள்ளது. அந்தளவுக்கு அரசு நிர்வாகத்தை சிறப்பானதாக மோடி மாற்றி இருக்கிறார்.
காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரத்தில் பலவீனமாக இருந்த நாட்டை இன்று மோடி உயர்ந்த பொருளாதாரத்திற்கு முன்னேற்றி உள்ளார். இந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பல கொள்கைகளை மோடி வகுத்து தந்துள்ளார். நம் நாடு இன்று கொள்கையால் செயல்படும் நாடாக மாறி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகால செயல்பாடுகள் மற்றும் அடுத்த 25 ஆண்டுக்கான திட்டங்களின் அடிப்படையில் வரும் லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ளோம். 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா 4 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து