புதுச்சேரி: அ.தி.மு.க., பா.ஜ., போஸ்டர் யுத்தம்
புதுச்சேரியில் பா.ஜ. மற்றும் அ.தி.மு.க., மாறி மாறி போஸ்டர் ஒட்டி தேர்தல் களத்தில் பரபரப்பாக்கி வருகின்றன.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில், ஆளும் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணியில் பா.ஜ.வும், காங்., தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சியும் அ.தி.மு.க.வும் களம் இறங்குகிறது. மூன்று கட்சியிலும் இதுவரை வேட்பாளர்களை இறுதி செய்யவில்லை.
புதுச்சேரி பா.ஜ.வுக்கு சீட் உறுதியாகி விட்டது. ஆனால், வேட்பாளர் யார் என்று முடிவுக்கு வராததால், தாமரை சின்னத்துடன், மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற பிரசாரத்தை பா.ஜ., செய்து வருகிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பிரதமர் மோடி, அ.தி.மு.க., தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்து பேசிய வாசகங்களுடன், பிரதமர் மோடி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., முன்னாள் பா.ஜ., தலைவர் சாமிநாதன் புகைப்படங்களுடன் பா.ஜ.வுக்கு ஓட்டு அளிக்கும்படி நகர பகுதியில் பா.ஜ., போஸ்டர் ஒட்டி உள்ளது.
இதற்கு புதுச்சேரி அ.தி.மு.க., கண்டனம் தெரிவித்ததுடன், பா.ஜ., போஸ்டருக்கு போட்டியாக, அ.தி.மு.க., சார்பில் நேற்று புதிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
அதில், பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமி படங்களுடன், அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்து பிரதமர் பேசிய கருத்துக்களும், தமிழகம் புதுச்சேரியில் அ.தி.மு.க., வெற்றி பெற பா.ஜ., கூட்டணி தொண்டர்கள் வாக்களிக்க தயாராகி விட்டனர். அதற்கு நன்றி என கூறும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக நேற்று சமூக வலைத்தளத்தில் மூன்றாவது போஸ்டர் வெளியானது. அதில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் எம்.ஜி.ஆர். தொப்பி அணிந்த புகைப்படம், பிரதமர் மோடி, நட்டா, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., முதல்வர் ரங்கசாமி புகைப்படங்களும், மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற வாசகங்கள் இடம் பெற்று இருந்தது.
இப்படி பா.ஜ.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி போஸ்டர் ஒட்டி வருவது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து