Advertisement

ஸ்ரீபெரும்புதூரில் களமிறங்கும் முடிவில் பா.ஜ.,

ஸ்ரீ பெரும்புதுார் தொகுதியில், இம்முறை பா.ஜ., நேரிடையாக போட்டியிட முடிவு செய்துள்ளது. மற்றொரு புறம், கூட்டணியில் இணைந்துள்ள த.மா.கா.,வும் இத்தொகுதியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது.

லோக்சபா தேர்தலுக்கான தேதி, விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள, பா.ஜ.,- காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், தி.மு.க.,- அ.தி.மு.க., உள்ளிட்ட மாநில கட்சிகளும் ஆயத்தமாகி விட்டன.

தாம்பரம், பல்லாவரம், ஸ்ரீ பெரும்புதுார், ஆலந்துார், மதுரவாயல், அம்பத்துார் ஆகிய, 6 சட்டசபை தொகுதிகளை அடக்கிய, ஸ்ரீ பெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், இம்முறை டி.ஆர். பாலுவுக்கே மீண்டும் சீட் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

அ.தி.மு.க., கூட்டணியில், அக்கட்சி சார்பில் போட்டியிட மூத்த தலைவர்கள் விருப்பம் காட்டவில்லை. அதனால், கடந்த முறை போலவே, இம்முறையயும் கூட்டணிக்கு ஒதுக்கலாம் என்று கூறப்படுகிறது. மற்றொரு புறம், கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்த பா.ஜ., தற்போது கூட்டணியில் இல்லை.

இந்த தேர்தலில், தி.மு.க., அ.தி.மு.க., அடுத்து மூன்றாவது அணியாக களமிறங்கும் பா.ஜ., கூட்டணி அமைப்பதில் தீவிரமாக உள்ளது. பிரதமர் மோடி மற்றும் மாநில தலைவர் அண்ணாமலையின் எழுச்சியால், திராவிட கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு பலத்தை காட்டும் முனைப்பில் உள்ள பா.ஜ.,, இம்முறை ஸ்ரீ பெரும்புதுார் தொகுதியில், நேரிடையாக களம் இறங்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.

அக்கட்சியில் உள்ள பிரபலங்கள், சீட் வாங்கும் போட்டியில் பல வழிகளில் காய் நகர்த்தி வருகின்றனர். ஸ்ரீ பெரும்புதுார் தொகுதி பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்டால், தொகுதி அமைப்பாளர் மீனாட்சி நித்தியசுந்தர், மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர், முன்னாள் எம்.எல்.ஏ., காயத்ரி தேவி மற்றும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் வேதசுப்பிரமணியம் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

அதேநேரத்தில், பா.ஜ., கூட்டணியில் இணைந்துள்ள, த.மா.கா.,வும், ஸ்ரீ பெரும்புதுார் தொகுதியை குறிவைத்து, அதற்கான காய் நகர்த்தி வருகிறது. அதேநேரத்தில், பா.ஜ., கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைந்தால், இது நிலைமை மாறவும் வாய்ப்புள்ளது.

எதுவாக இருந்தாலும், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் போட்டியிடுவது எந்த கட்சி என்பது, வரும் நாட்களில் தெரிந்துவிடும்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்