செலவு செய்து ஜெயித்தாலும் டில்லிக்கு போய் என்ன பலன் :கடலூரில் அ.தி.மு.க., போடும் கணக்கு
கடலுார் சட்டசபை தொகுதியில் கடந்த தேர்தலில் அதிகளவில் செலவு செய்தும் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டதால், இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட கடலுார் மாவட்ட அ.தி.மு.க.,வினர் தயக்கம் காடடுகின்றனர்.
கடலுார் மாவட்டத்தில், கடலுார் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடலுார் தொகுதியில் கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி (தனி) ஆகிய சட்டசபை தொகுதிகளும், சிதம்பரம் தொகுதியில் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி), அரியலுார் மாவட்டத்தில் அரியலுார், ஜெயங்கொண்டம், பெரம்பலுார் மாவட்டத்தில் குன்னம் ஆகிய சட்டசபை தொகுதிகளும் உள்ளன.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், கடலுார் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வின் கோவிந்தசாமியும், தி.மு.க., வேட்பாளராக ரமேஷும் போட்டியிட்டனர். ரமேஷ் வெற்றி பெற்றார். சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க.,வின் சந்திரசேகரனும் தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சி தலைவர் திருமாவளவனும் மோதினர். திருமாவளவன் வெற்றி பெற்றார்.
கடந்த சட்டசபை தேர்தலில், கடலுாரில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்தவர்களுக்குள் ஒற்றுமை என்ன என்றால், அனைவரும் மிக அதிகமாக செலவு செய்தனர். அப்படி இருந்தும் வெற்றி கிட்டவில்லை. குறிப்பாக சம்பத் காட்டிய தாராளம் இன்றும் தொகுதியில் பேசப்படுகிறது.
“சட்டசபைக்கே அவ்வளவு செலவு செய்தோம். ஜெயிக்க முடியவில்லை. லோக்சபா தேர்தலுக்கு பல மடங்கு செலவு பிடிக்கும். அப்படி செலவிட்டாலும் வெற்றி உறுதி என சொல்ல முடியாது. ஒருவேளை வெற்றி பெற்றாலும் பின்னர் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியாது. பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லாத நிலையில், டில்லிக்கு போய் நாம் என்ன செய்ய போகிறோம்?” என்று அதிமுக வட்டாரங்களில் பேச்சு ஓடுகிறது.
செலவு செய்ய தயக்கமும், ஜெயித்தால்கூட செலவிட்ட பணத்தை சம்பாதிக்க முடியுமா என்ற சந்தேகமும் நிலவுவதால், கடலுார் தொகுதி அ.தி.மு.க.,வில் தேர்தல் பரபரப்பு தொற்றவில்லை.
வாசகர் கருத்து