Advertisement

தொகுதியில் தலை காட்டாத காங்., - எம்.பி., ஜோதிமணியை விரட்டி அடிக்கும் மக்கள்

நான்கு ஆண்டுகளாக தலைகாட்டவில்லை என்பதால், தொகுதிக்கு செல்லும் போது, காங்., - எம்.பி., ஜோதிமணியை மக்கள் விரட்டி அடிக்கின்றனர்.
கரூர் லோக்சபா தொகுதி, காங்., - எம்.பி., ஜோதிமணி, கடந்த தேர்தலின் போது, உட்கட்சியில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு சோனியா குடும்பத்துடன் உள்ள நெருக்கமான உறவு காரணமாக, எதிர்ப்பு இருந்தபோதும், கரூரில் தொடர்ந்து போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

மேலும் தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன், அக்கட்சியினருடன் இணக்கமாக இருந்த ஜோதிமணி, உள்ளாட்சி தேர்தலுக்கு பின், தி.மு.க.,வினருடன் மல்லுக்கட்ட ஆரம்பித்தார். கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி, தி.மு.க. அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்தார்.

எம்.பி., ராகுல் மற்றும் அவரது அதிகார மையங்களை மட்டுமே சுற்றி வருவதால், பல மாதங்களாக கரூர் தொகுதியை மறந்து விட்டார். தான் எம்.பி.,யாகி நான்கரை ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நெருங்கும் சமயத்தில், தொகுதி பக்கம் தற்போது தலைகாட்ட தொடங்கியுள்ளார்.

ஆனால், பல்வேறு இடங்களில் இவரை மக்கள் விரட்டி அடிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.கடந்த ஆண்டு ஆகஸ்டில் கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மூக்கணாங்குறிச்சி அருகில், கந்தசாரப்பட்டி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, 'ஓட்டு கேட்க மட்டுமே வருகிறீர்கள். அதன்பின் உங்களை பார்க்கவே இல்லை. குறிப்பாக நன்றி சொல்ல கூட வரவில்லை' என்று காட்டமாக பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேபோன்ற சம்பவம் வெண்ணமலை என்ற இடத்திலும் நடந்தது.

கடந்த ஜனவரியில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமுக்கு வந்த போது, தி.மு.க., நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள் இவரை முற்றுகையிட்டு, சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

கரூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளில் எங்கு சென்றாலும், எம்.பி., ஜோதிமணியை விரட்டியடிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.தி.மு.க., - காங்., தொகுதி பேச்சு வார்த்தையில் முடிவடையாமல் இழுபறி நீடித்து வருகிறது. ஒரு வேளை, கரூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால், தலைமையிடம் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி மீண்டும் ஜோதிமணி சீட் வாங்கி வந்து விடுவார்.

கடந்த தேர்தலின் போது, எம்.பி., ஜோதிமணிக்காக, முன்னாள் அமைச்சர், செந்தில் பாலாஜியின் பங்கு பெரிதாக இருந்தது. தற்போது செந்தில்பாலாஜி சிறையில் உள்ளார்.

இந்நிலையில்,கரூர் லோக்சபா தொகுதியில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் துரத்தியடிக்கப்படும் ஜோதிமணியை வைத்துக் கொண்டு, எப்படி ஓட்டு கேட்க முடியும் என, தி.மு.க.,வினர் புலம்பி வருகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்