Advertisement

கூட்டணி முடிவாகாமல் பா.ம.க., தவிப்பு

லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ம.க., வெளிப்படையாக எந்த பேச்சையும் நடத்தவில்லை. ஆனால், அ.தி.மு.க., பா.ஜ., ஆகிய இரு கட்சிகளிடமும் பா.ம.க., திரைமறைவில் பேச்சு நடத்தி வருகிறது. 'கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தொடர்ந்து கூறி வருகிறார்.

ராஜ்யசபா எம்.பி.,யுடன் மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என பா.ஜ.,விடம் பா.ம.க., நிபந்தனை விதித்திருப்பதாகவும், ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், முருகன் வேறு மாநிலங்களில் இருந்து ராஜ்யசபா எம்.பி., யாக்கப்பட்டு உள்ளதால், ராஜ்யசபா எம்.பி., கோரிக்கையை பா.ஜ., ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தால் தர்மபுரி உள்ளிட்ட சில தொகுதிகளில் வென்று விடலாம் என, பா.ம.க., நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். வேறு சில நிர்வாகிகள், 2014 லோக்சபா தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க., தயவின்றி பா.ஜ., கூட்டணியில் வெற்றி பெற்றதையும், வரும் தேர்தலில் மீண்டும் பா.ஜ.,வே வெல்லும் என்ற கருத்துக் கணிப்புகளையும் சுட்டிக்காட்டி, பா.ஜ.,வுடனே கூட்டணி வைக்கலாம் என அன்புமணியிடம் ஆலோசனை கூறியுள்ளனர்.

இது தொடர்பாக பா.ம.க., நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, 'கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க., - பா.ஜ., தரப்பில் முக்கிய நபர்களிடம் கட்சி மேலிடம் பேச்சு நடத்தி வருகிறது. 'இரண்டில் எந்த கட்சியுடன் சேர்ந்தால் பா.ம.க.,வின் எதிர்காலத்திற்கு நல்லது என ராமதாசும், அன்புமணியும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்; நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்து கேட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால், அதன்பிறகே யாருடன் கூட்டணி என்பது முடிவாகும்' என்றனர்.

தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கட்டாயம் ஒதுக்கியே ஆக வேண்டும் என அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., என இரு கட்சிகளுக்கும் பா.ம.க., தரப்பில் தொடர் அழுத்தம் கொடுப்பதாலேயே, கூட்டணி பேச்சு முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது என, பா.ம.க., மேலிடத் தலைவர்கள் கூறுகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்