"கமல்நாத்துக்கு கதவுகள் மூடப்பட்டுவிட்டன!" - ம.பி. பா.ஜ., அமைச்சர் பேட்டி
"மத்தியபிரதேசத்தில் கமல்நாத்துக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டது" என மத்தியபிரதேச பா.ஜ., அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவம் மத்தியபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான கமல்நாத், பா.ஜ.,வில் இணையப் போவதாக தகவல் பரவியது. இதையடுத்து, அவரை சமாதானப்படுத்தும் வேலைகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
பா.ஜ.,வில் இணைவது குறித்து கமல்நாத் தரப்பில் இருந்தும் எந்தவித தகவல்களும் வெளிவரவில்லை. அவர் டெல்லியில் முகாமிட்டதே, ஊகங்கள் வெளியாவதற்கு காரணமாக அமைந்தன. அதேநேரம், பா.ஜ.,வில் கமல்நாத் இணையப் போவதாக வெளியான தகவலை காங்கிரஸ் நிர்வாகிகள் மறுத்தனர். ஆனால், அவரது சொந்த ஊரான சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பல காங்கிரஸ் நிர்வாகிகள், பா.ஜ.,வில் இணைந்தனர்.
இந்நிலையில், பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜய்வர்கியா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், "கமல்நாத்துக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டன. அவர், எங்கள் கட்சிக்குத் தேவையில்லை என முன்னரே கூறியிருந்தேன்" என்றார்.
நீரவ் மோடி குறித்த திக்விஜய் சிங்கின் கருத்துக்குப் பதில் அளித்த கைலாஷ் விஜய் வர்கியா, "காங்கிரஸ் கட்சியில் அவரும் அவரைப் போன்ற நிர்வாகிகளும் விரக்தியில் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் இருண்டுவிட்டதால் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள்" என்றார்.
வாசகர் கருத்து