"இண்டியா கூட்டணியே, ஊழல்வாதிகளின் குழு தான்" - ஜே.பி.நட்டா ஆவேசம்
"ஊழல் நிறைந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டணி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். அது ஊழல் கூட்டணி." என மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.
மும்பையில் பா.ஜ., கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுவதற்காக பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா (பிப்.,21) சென்றிருந்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஊழல் நிறைந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டணி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். அது ஊழல் கூட்டணி. அந்தக் கூட்டணியை சேர்ந்த ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார். ஒற்றுமைக்கான யாத்திரை என்று அவர்கள் கூறிக் கொள்கிறார்கள். சொல்லப்போனால் அது உண்மையை உடைக்கின்ற யாத்திரை. நீதி யாத்திரை என்கிறார்கள். ஆனால், அது அநீதி யாத்திரையாகத் தான் பார்க்கிறேன்.
மகாராஷ்ட்ராவில் உத்தவ் தாக்கரே ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்தவர் சிறைக்குச் சென்றார். உத்தவ் ஆட்சியில் ஊழல் நடந்தது. தற்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் அமலாக்கத்துறையின் சம்மனை ஏற்காமல் புறக்கணிக்கிறார். அமலாக்கத்துறையின் விசாரணையை எதிர்கொள்வதில் அவருக்கு ஏன் அச்சம் எனத் தெரியவில்லை. அதனால் தான் ஊழல் செய்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இண்டியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளதாக கூறுகிறேன்.
நமது தலைவர் வாஜ்பாய், 1980ம் ஆண்டுகளில் பேசும்போது 'இருள் அகலும், ஒளி பிறக்கும், தாமரை மலரும்' என்றார். அவர் கூறியபடியே, பிரதமர் மோடியின் தலைமையில் தாமரை மலர்ந்துள்ளது. எவ்வளவோ கடினமான பாதைகளைக் கடந்து வந்திருக்கிறோம். ஒருகாலத்தில் இரட்டை இலக்கம் தான் அடையாளமாக இருந்தது. இப்போது உலகில் மிகப் பெரிய கட்சியாக பார்க்கப்படுகிறோம். இருளில் இருந்து விலகி ஒளியில் இருக்கிறோம்.
முன்பெல்லாம் ஐந்தாறு மாநிலங்களில் ஆட்சியை நடத்தினோம். இப்போது 17 மாநிலங்களில் என்.டி.ஏ ஆட்சி நடக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய அரசியலின் போக்கை பிரதமர் மோடி மாற்றி அமைத்துவிட்டார். மோடியின் ஆட்சி, பெண்களுக்கும் ஏழைகளுக்கும் அதிகாரத்தைக் கொடுத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து