நீதித்துறைக்கு சவால்விடும் மம்தா - பா.ஜ., கொதிப்பு
கொல்கத்தா: பழங்குடியின மக்களின் நிலங்களை அபகரித்த திரிணமுல் காங்., கட்சியினரை கண்டித்து சந்தேஷ்காலி காலி பகுதிக்குச் சென்ற பா.ஜ,.வினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்ற உத்தரவை மம்தா பானர்ஜி அரசு மதிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
மேற்குவங்க மாநிலம், வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலியை சேர்ந்த திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அப்பகுதியை சேர்ந்த பழங்குடியினரின் நிலங்களை அபகரித்ததாக புகார் எழுந்தது. மேலும், பழங்குடியின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதிர்ச்சி புகார் எழுந்தது. இதனால், சந்தேஷ்காலியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
அப்பகுதியில் நிலவும் தொடர் வன்முறை சம்பவங்கள் காரணமாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எதிர்க்கட்சியினர் நுழைய முடியாத சூழல் ஏற்பட்டது. மாநில அரசின் இந்த உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், 144 தடை உத்தரவு ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இன்று (பிப்.,20) சந்தேஷ்காலிக்கு சென்ற பா.ஜ., தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் சி.பி.எம்., கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை எதிர்த்து சுவேந்து அதிகாரி உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம் நடத்தினர்.
காவல்துறையின் செயல்பாடு குறித்துப் பேசிய பா.ஜ., தலைவர் சுவேந்து அதிகாரி, ''மாநில அரசு மேல்முறையீடு செய்துள்ளதால், 144 தடை ரத்து செல்லாது என்று போலீசார் தெரிவித்தனர். அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய தூணான நீதித்துறைக்கு மம்தா பானர்ஜி சவால் விடுகிறார்." எனத் தெரிவித்தார்
வாசகர் கருத்து