ரெய்டு மேல் ரெய்டால் திணறும் தி.மு.க., 'கவனிப்பு' இல்லையேல் வெற்றி சாத்தியமாகுமா?
அரசின் மீதான கடும் அதிருப்தி, அ.தி.மு.க.,வுக்கு கட்சியின் அமைப்பு ரீதியிலான ஓட்டு வங்கி, களத்தில் அண்ணாமலைக்கு கிடைத்து வரும் அமோக ஆதரவு ஆகிய காரணங்களால், கோவை தொகுதியில் ஆரம்பத்திலிருந்தே தி.மு.க., திணறத் துவங்கிவிட்டது. ஆனால், இங்கு கண்டிப்பாக ஜெயிக்க வேண்டுமென்றே, இத்தொகுதிக்கு பொறுப்பாளராக அமைச்சர் ராஜாவை நியமித்தது தி.மு.க., தலைமை.
அதன்படி, வேட்பாளர்அறிவிக்கப்பட்டதுமே கோவைக்கு வந்து விட்டார் ராஜா. ஆனால், அவருக்கு கோவை தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை எப்படி வழி நடத்தி, தேர்தல் வேலைகளைச் செய்வது என்பதில் ஒரு தெளிவு கிடைத்தபாடில்லை.
தி.மு.க.,வுக்குள் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வின் 'ஸ்லீப்பர் செல்'கள் அதிகமிருப்பதால், ஆளுங்கட்சியின் தேர்தல் திட்டங்கள் அவ்வப்போது கசிந்து விடுகின்றன.
கைப்பற்றல்
'கோவையில் தி.மு.க., ஓட்டு வங்கி எப்போதோ உருக்குலைந்து விட்டது. கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளைச் சேர்த்தாலும் வெற்றி பெறும் அளவுக்கு ஓட்டுகளைப் பெறுவது கஷ்டம் என்பது, தி.மு.க., தலைமைக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது.
'இதனால், ஓட்டுக்கு பெரிய அளவில் 'கவனிப்பு' செய்வது என்று ஆளுங்கட்சி தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது' என அக்கட்சியினர் அடித்துச் சொல்கின்றனர்.
இதற்கான எல்லா அம்சங்களும் கோவையைச் சுற்றிலும் இருக்கும் பல பகுதிகளுக்கு ஏற்கனவே கொண்டு வந்து அடுக்கப்பட்டு விட்டன.
இதை முன் கூட்டியே மோப்பம் பிடித்து தான், கோவையில் அமைச்சர் நேருவுக்கு நெருக்கமான அவினாசி ரவி, கான்ட்ராக்டர் வேலுமணி வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது.
சீனியர் அமைச்சர் ஒருவரின் தம்பி, பிரபல மருத்துவமனையின் டாக்டர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. பெரும் எண்ணிக்கையில் கவனிப்புக்கு வைத்திருந்தவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோவைக்கு மட்டுமின்றி, பொள்ளாச்சி, திருப்பூர், நீலகிரி மற்றும் தென் சென்னை தொகுதிகளில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்டிருந்தவற்றை கைப்பற்றி உள்ளனர்.
இதில், கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு தருவதற்கு திட்டமிட்டிருந்தவை பறிமுதல் செய்யப்பட்டு விட்டதால், மற்ற வழிகளிலும் கவனிப்பு வெளியில் வருவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சிக்கு உதவ நினைத்த மற்ற தொழிலதிபர்களும் அச்சம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதே போல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது.
கடும் எதிர்ப்பு
இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி, வரும் தேர்தலில் சிறப்பான கவனிப்புகள் நடக்க வாய்ப்பில்லை என்று ஆளுங்கட்சி தரப்பிலேயே சோகப்படுகின்றனர்.
இதையடுத்து தி.மு.க., நிர்வாகிகள் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் களத்தில் திணறி, திக்கு முக்காடிக் கொண்டிருக்கின்றனர்.
களநிலவரப்படி, ஓட்டுக்கு எதிர்பார்ப்பதை கொடுக்காவிட்டால் களத்தில் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வரும் ஆளுங்கட்சிக்கு வெற்றி எட்டாக்கனியாகுமோ என்ற அச்சம், அக்கட்சியின் மேலிடம் வரை வியாபித்துள்ளது என்கின்றனர் தி.மு.க.,வினர்.
வாசகர் கருத்து