Advertisement

மாயமான 32,000 ஓட்டுகள்!

தமிழக தலைநகரான சென்னையின் முக்கிய தொகுதியாக தென் சென்னை உள்ளது. வி.ஐ.பி., போட்டியாளர்கள் மல்லுக்கட்டும் தொகுதியான இங்கு, 32,000 பேருக்கு ஓட்டு இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னையின் பிரதான நதிகளான கூவம், அடையாற்றை ஒட்டிய சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்த பெரும்பாலானோர், சாலையோரம் வசித்த மக்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களுக்காக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கத்தில், 21,000 வீடுகள் கட்டப்பட்டன. மொத்தம் 160 பிளாக்குகளில், 60,000த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சமுதாய வளர்ச்சி பிரிவு ஏற்படுத்தி தருகிறது.

இந்த குடியிருப்பு வளாகத்தில், குறைந்தது 50,000த்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கின்றனர். ஆனால், 18,250 வாக்காளர்களுக்கு மட்டுமே ஓட்டு உள்ளது. மீதமுள்ளோருக்கு ஓட்டு இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மறுகுடியமர்வு செய்யப்பட்டதால், ஏற்கனவே அவர்கள் வசித்த பகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்த பெயர்கள் நீக்கப்பட்டன. அதற்கு மாறாக, பெரும்பாக்கத்தில் முகவரி மாற்றம் செய்து, புதிய வாக்காளர் அட்டை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததால், வாக்காளர்கள் பட்டியலில் அவர்கள் பெயர் இடம்பெறவில்லை.

இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:

சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர், நகர்ப்புற குடியிருப்பு வளாகத்தில் குடியேறியுள்ளனர். அடுத்தடுத்து பலரும் இங்கு குடியேறி வருகின்றனர்.

எங்களில் பெரும்பாலானோருக்கு ஓட்டு இல்லை. இருக்கும் 18,250 வாக்காளர்கள் வரும் லோக்சபா தேர்தலுக்கு ஓட்டளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பலருக்கு, குடியிருப்பு பிளாக் எண் குறிப்பிடாமல் பூத் சிலிப் வழங்கியதால், எந்த ஓட்டுச்சாவடி என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

அதோடு, இறப்பு, இடம்பெயர்வு போன்ற காரணத்தால், 2,000 வாக்காளர் அட்டைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மீதமுள்ள 16,250 பேர் தான் ஓட்டளிக்க முடியும்.

இதுகுறித்து கேட்டதற்கு, வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தியபோதே தெரிவித்திருக்க வேண்டுமே என்கின்றனர். தினக்கூலிகளாக வேலைக்கு சென்று வரும் நிலையில், வாக்காளர் அட்டை பெறுவது குறித்து இங்கிருப்போருக்கு விழிப்புணர்வு இல்லை.

எங்களை இங்கு மறுகுடியமர்வு செய்து, எங்களின் அடிப்படை தேவைகளை செய்து கொடுப்பதற்காக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சமுதாய வளர்ச்சி பிரிவு அலுவலர்கள் அலட்சியத்தால், இந்த குடியிருப்பில், 31,750 பேருக்கு மேல், இம்முறை ஓட்டளிக்க முடியாமல் பரிதவிக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பிரிவு, குடும்ப அட்டை, ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை, அந்தந்த துறை வாயிலாக முகவரி மாற்றி புதுப்பித்து தர வேண்டும். அரசின் அனைத்து திட்டங்களும் இந்த பகுதியில் உள்ளோருக்கு சேர நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் செய்யாததால், ஓட்டளிக்க முடியாத துரதிருஷ்ட நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தகவல், அனைத்து கட்சியினருக்கும் தெரிந்து விட்டதால், ஓட்டளிக்க முடியாத இவர்களை இப்போதைக்கு நாம் ஏன் கண்டு கொள்ள வேண்டும் என முடிவெடுத்து, இந்த பக்கம் ஓட்டு கேட்டு கூட யாரும் வருவதில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சமுதாய வளர்ச்சி பிரிவு, குடியிருப்பில் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததாக அறிக்கை அனுப்புகிறது. இங்கு ஓட்டளிக்கும் வகையில், வாக்காளர் அடையாள அட்டை வழங்க ஏன் முயற்சி எடுக்கவில்லை என தெரியவில்லை; விசாரித்து, நடவடிக்கை எடுக்கிறோம். இப்போதைக்கு இவ்வளவுதான் எங்களால் சொல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செங்கல்பட்டு மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் கூறியதாவது:

தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் முகாம் நடத்தி வாக்காளர்களை சேர்த்து வருகிறோம். ஆன்லைன் வழியாகவும், சட்டசபை தொகுதி தேர்தல் பிரிவு அலுவலகம் வாயிலாகவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெரும்பாக்கம் எட்டடுக்கு குடியிருப்பில், முறையாக முகாம் நடத்தப்பட்டது. மக்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, நகர்ப்புற வழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சமுதாய வளர்ச்சி பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு வசிப்போருக்கு வாக்காளர் அட்டை ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதோடு, பதிவும் செய்து கொடுத்திருக்க வேண்டியது அவர்கள் தான். மற்றபடி, எங்கு தவறு நடந்தது என்று தெரியவில்லை. விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேர்தல் கமிஷன், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பலகட்ட விழிப்புணர்வு செய்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில், 32,000 பேருக்கு ஓட்டு இல்லாதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)