'காண்டு' ஆகும் கூட்டணி கட்சிகள் பதவி தராததால் தி.மு.க., தவிப்பு
வாரிய தலைவர் உள்ளிட்ட அரசு பொறுப்புகளில் பதவி வழங்கப்படாததால், தி.மு.க., கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், தேர்தலில் இணைந்து பிரசாரம் மேற்கொள்ள தி.மு.க.,வினர் அழைப்பு விடுத்து வரும் நிலையில், அதிருப்தியில் இருப்போர் மொபைல் போனை கூட எடுக்காமல் புறக்கணிக்கின்றனர்.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த, 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், காங்கிரஸ் - ம.தி.மு.க., - வி.சி., - கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் போட்டியிட்ட பலரை, தி.மு.க.,வினரே உள்ளடி வேலை பார்த்து தோற்கடித்தனர். இதனால் கூட்டணி கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.
தி.மு.க.,வில் உள்ள திண்டுக்கல் லியோனி உள்ளிட்டோருக்கு வாரிய தலைவர் பதவிகள் வழங்கப்பட்டன. ஆனால், கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. கடந்த, 2023ல் கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத் தலைவர் பதவிகள் காலியாகின. தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய அரசு ஆர்வம் காட்டவில்லை.
இதற்கு, உள்ளாட்சி தேர்தலின் போது ஏற்பட்ட குளறுபடிகள், கூட்டுறவு சங்க தேர்தலிலும் நடந்தால், கூட்டணி கட்சிகள் அதிருப்தி மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதே காரணம். மக்கள் பிரச்னை தொடர்பாக அளிக்கப்பட்ட மனுக்கள் மீது தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பொதுத்துறை நிறுவனங்களில் கூட்டணி கட்சி தலைவர்களின் தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கைகள் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தி.மு.க., மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நகர செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள், தங்கள் பகுதியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, 'தேர்தலுக்கு இணைந்து செயல்படுவோம்' என்கின்றனர்.
எனவே, கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலரும், தி.மு.க.,வின் அழைப்பை புறக்கணிக்கும் வகையில், மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து விடுகின்றனர். இதனால், கூட்டணி கட்சியினரை தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர் கருத்து