மோடி 'ரோடு ஷோ'வில் மாணவர்கள்: கல்வித்துறை விசாரணை
கோவையில் பிரதமர் மோடியின் 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரத்தில், கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, சாய்பாபா காலனியில் நடந்த ரோடு ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவருக்கு கோவை மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பள்ளி சீருடையுடன் பள்ளி மாணவர்களும் பங்கேற்ற வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியானது.
இதுகுறித்து, தேர்தல் கமிஷனில் தி.மு.க., மற்றும் இ.கம்யூ., சார்பில் புகார் அளிக்கப்பட்டது. புகார் கொடுத்த பின், தி.மு.க., வழக்கறிஞர் சரவணன் கூறுகையில், "கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்கள், பா.ஜ.,வை புகழ்ந்து பாடல்களை பாடியுள்ளனர்.
இதன்மூலம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் செயலில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது. இது, குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றத்துக்குரிய செயல். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளோம்" என்றார்.
இந்நிலையில், பிரதமர் நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்க வைத்த, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் கோவை மாவட்ட கல்வி அலுவலர் புனிதா விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து, விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகத்துக்கு கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வாசகர் கருத்து