அந்தோணி மகன் அனிலை கரை சேர்க்கும் மோடி
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏ.கே.அந்தோணி. இந்திரா காலம் முதல், காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தார். கேரள முதல்வர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் என அரசிலும், கட்சியிலும் பல பொறுப்புகளை வகித்துள்ளார். அரசியலில் இருந்து ஒதுங்கி, இப்போது திருவனந்தபுரத்திலுள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
அந்தோணிக்கு அனில் ஆன்டனி, அஜித் ஆன்டனி என்ற இரண்டு மகன்கள். அனில் ஆன்டனி தந்தையின் பாதையை பின்தொடர்ந்து காங்கிரசில் சேர்ந்தார். கட்சி ஐ.டி., பிரிவில் உள்ளூர் தலைவராக இருந்தார். மற்ற காங்., தலைவர்களை போல அந்தோணி தன் வாரிசுக்கு எம்.பி.,- - எம்.எல்.ஏ., பதவி ஏதும் வாங்கித் தரவில்லை. இதனால் விரக்தியான அனில் ஆன்டனி கடந்த ஆண்டு பா.ஜ.,வில் சேர்ந்தார்.
குறுகிய காலத்திலேயே அவருக்கு பா.ஜ.,வில் தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. கிறிஸ்துவர்கள் அதிகமுள்ள கேரளாவில் இருந்து, கிறிஸ்துவர் ஒருவரை கட்சியில் சேர்த்து பதவி வழங்க வேண்டும் என்ற பா.ஜ.,வின் விருப்பமும் இதனால் நிறைவேறியது. இப்போது பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிடுகிறார். சபரிமலையை உள்ளடக்கிய இத்தொகுதியில் பா.ஜ.,வுக்கு தனிச்செல்வாக்கு உண்டு.
இந்த தொகுதியில் கிறிஸ்துவர்கள் எண்ணிக்கை அதிகம். இதை மனதில் வைத்து தான் அனில் ஆன்டனிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கு, கடந்த மூன்று முறையும் வெற்றி பெற்ற ஆன்டோ ஆன்டனியை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. இம்முறையாவது இந்ததொகுதியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் இடதுசாரி கூட்டணி, முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக்கை நிறுத்தியுள்ளது. மும்முனை போராட்டம் நடக்கும் இங்கு, அனில் ஆன்டனியை ஜெயிக்க வைத்து, கிறிஸ்துவ பிரதிநிதியாக அமைச்சராக்க திட்டமிடுகிறது பா.ஜ.,
பிரதமர் மோடியின் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தில், அவர் தேர்வு செய்த இரண்டு தொகுதிகளில் ஒன்று பத்தனம்திட்டா. இங்கு நடக்கின்ற பொதுக் கூட்டத்தில் அனில் ஆன்டனியை ஆதரித்து பேசுகிறார். 'அனில் ஆன்டனியை ஜெயிக்க வைப்பது மோடியின் கேரண்டி' என்கின்றனர் பத்தனம்திட்டா பா.ஜ.,வினர்.
வாசகர் கருத்து