2ம் கட்ட பட்டியல்: வாரிசுகளுக்கு வாய்ப்பு கொடுத்த காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடக் கூடிய 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில், பா.ஜ.,வில் இருந்து விலகிய ராகுல் கஸ்வான் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை சில நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் வெளியிட்டது. இதில், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியும் திருவனந்தபுரத்தில் சசிதரூர் உள்ளிட்டோர் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்தப் பட்டியலில் சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, தெலங்கானா, மேகாலயா, லட்சத்தீவு, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் விவரங்கள் வெளியானது.
இந்நிலையில், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார். இந்தமுறை, அசாம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கான 43 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் உள்ள 43 பேரில் 25 பேர் 50 வயதுக்கு குறைவானவர்கள் எனவும் 13 எஸ்.சி, 9 எஸ்.டி, 10 ஓ.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய வேட்பாளர்கள் யார்?
அதன்படி, மத்திய பிரதேசத்தில் கமல்நாத் மகன் நகுல்நாத், சிந்த்வாரா தொகுதியில் போட்டியிட உள்ளார். ராஜஸ்தானின் ஜலோர் தொகுதியில் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மோகன் குப்தா, அகமதாபாத் தொகுதியிலும் பா.ஜ.,வில் இருந்து சமீபத்தில் விலகிய ராகுல் கஸ்வான், ராஜஸ்தானின் கரு தொகுதியிலும் போட்டியிட உள்ளார்.
வாசகர் கருத்து