பிரதமரை சந்தித்தது ஏன் : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
"மதுரைக்கு சென்று பிரதமரை வரவேற்று வழியனுப்பி வைத்ததில் எந்த அரசியலும் இல்லை" என, தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் கட்டட தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் நலனை கவனத்தில் கொண்டு செயல்படுவது மிக முக்கியம். திராவிட இயக்கத்துக்கு நான்காவது தலைமுறையாக பணி செய்து வருகிறோம். அரசில் இருக்கும்போது நிர்வாகத்தை சிறப்பாக நடத்த வேண்டும். அது சாதாரண பணி கிடையாது. அதைக் கடந்து தான் முதல்வரும் நாங்களும் பணி செய்து வருகிறோம்.
இன்றுகூட ஒரு நாளேட்டில் எனக்கும் பிரதமருக்கும் தனிப்பட்ட நட்பு இருப்பதுபோல செய்தி வெளிவந்துள்ளது. மதுரைக்கு சென்று பிரதமரை அனுப்பி வைத்ததில் எந்த அரசியலும் இல்லை. முதல்வர் கொடுத்த பணியை தான் நான் செய்தேன். ஆனால், சிலர் போலியான செய்திகளை பரப்புகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் மோடி அரசு உள்ளது. இந்த ஆண்டுகளில் அவர் எத்தனை முறை தமிழகத்துக்கு வந்து சென்றுள்ளார். இங்கு அரசியல் செய்வதற்கு தான் பிரதமர் வருகிறாரே தவிர, உண்மையான மக்கள் நலன் கிடையாது. அப்படி அவருக்கு அக்கறை இருந்திருந்தால் புயல், வெள்ள பாதிப்பின்போது சென்னைக்கோ தூத்துக்குடிகு வந்து மக்களை சந்தித்திருக்கலாம். புயலின் பாதிப்பு குறித்தும் அவர் நேரில் பார்க்க வரவில்லை.
தமிழகத்துக்கு தேவையான நியாயமான கோரிக்கைகளை அவர் நிறைவேற்றியிருந்தால் பாராட்டியிருப்போம். ஆனால், நாட்டின் முக்கிய பொறுப்பில் அவர் இருக்கிறார். அவரை வரவேற்பதும் அனுப்புவதும் அரசின் பணி. இதுதொடர்பாக, முதல்வர் அலுவலகத்தில் இருந்து எனக்கு கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்றினேன். இதில் எந்த அரசியலும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து