லஞ்சம், ஊழல் தான் 'இண்டியா' கூட்டணியின் நோக்கம் : பிரதமர் மோடி

"குடும்ப அரசியல் பேசும் கட்சிகள், தங்கள் எதிர்காலத்தை மட்டுமே சிந்திக்கிறார்கள்" என, சென்னையில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

சென்னை நந்தனத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

ஒவ்வொரு முறை சென்னைக்கு வரும்போது தமிழர்களால் எனக்கு சக்தி உருவாகிறது. திறமை, வர்த்தகம், பாரம்பரியம் ஆகியவற்றின் மையப்புள்ளியாக சென்னை இருக்கிறது. எனக்கும் தமிழகத்திற்கும் இடையேயான உறவு மிக பழமையானது. சில ஆண்டுகளாகவே நான் தமிழகம் வரும்போது சிலருக்கு வயிற்று வலி ஏற்படுகிறது, காரணம், மக்கள் மத்தியில் பா.ஜ.,வுக்கான ஆதரவு அதிகரித்து வருவது தான்.

வளர்ச்சி அடைந்த பாரதத்தோடு வளர்ச்சி அடைந்த தமிழகத்தையும் நான் இலக்காக வைத்திருக்கிறேன். பாரதத்தை உலகின் மிகச் சிறந்த மூன்றாவது பொருளாதார சக்தியுள்ள நாடாக மாற்ற வேண்டும். இதற்கு சென்னையின் தேவை, மிக அத்தியாவசியமானது, சென்னையில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சென்னை துறைமுகம், மதுரவாயில் இடையே பறக்கும் சாலையை ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.க., அரசு, சென்னை மக்களின் தேவைகளை கண்டு கொள்ளவில்லை. சென்னையில் இயற்கை பேரிடர் வந்தபோது, தி.மு.க அரசு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டாமல் துயரங்களை அதிகரிக்க செய்தது.

தி.மு.க., அரசுக்கு தமிழகத்தை பற்றி எந்தக் கவலையும் இல்லை. மக்கள் துன்பத்தில் இருக்கும் போது தி.மு.க., அரசு உதவவில்லை. மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு தி.மு.க., அரசு இடையூறாக இருக்கிறது. ஆனால், மத்திய அரசு, ஏழைகளின் கஷ்டங்களை புரிந்து செயல்படுகிறது. கொரோன காலத்தில் மக்களுக்காக இலவச ரேஷன், இலவச கொரோனா தடுப்பூசி வழங்கினோம்.

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடனுதவி அளித்துள்ளது. மத்திய அரசு, தமிழகத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறது, இதன் பயனை நேரடியாக பயனாளருக்கு வழங்குகிறது. இது, தி.மு.க., அரசுக்கு எரிச்சலை கொடுக்கிறது. மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களில் கொள்ளையடிக்க முடியாமல் இருப்பது தான் தி.மு.க., அரசுக்கு வருத்தமாக இருக்கிறது.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக கொடுக்கப்படும் பணத்தை கொள்ளையடிக்க விட மாட்டோம். நீங்கள் கொள்ளையடித்த பணத்தை வசூலித்து மீண்டும் மக்களிடமே கொடுப்போம். இது மோடியின் உத்தரவாதம். குடும்ப அரசியல் பேசும் கட்சிகள், தங்கள் எதிர்காலத்தை மட்டுமே சிந்திக்கிறார்கள்.

உங்களுக்கு தி.மு.க., காங்கிரசை நன்றாக தெரியும். இவர்களை போல பலர் உள்ளனர். இவர்களின் குறிக்கோள் குடும்பம் தான். எனக்கு குடும்பம் இல்லை சொல்கிறார்கள், அவர்களுக்கு குடும்பம் இருப்பது நாட்டை கொள்ளையடிக்க மட்டும் தான். இந்த நாடும் நாட்டு மக்களும் தான் எனது குடும்பம். நாட்டில் உள்ள இளைஞர்கள், மகளிர் , விவசாயிகள் என அனைவரும் எனது குடும்பத்தினர்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாரத மக்கள் என்னுடைய சொந்தம். காங்கிரஸ், தி.மு.க., என இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஊழலில் மூழ்கியுள்ள கட்சிகள். இண்டியா கூட்டணியில் உள்ளவர்களுக்கு லஞ்சம் , ஊழல் செய்வதை தவிர எதுவும் தெரியாது. எத்தனை இன்னல்கள் வந்தாலும் இந்த நாட்டை சுத்தமாக மாற்றுவேன்.

தி.மு.க., அரசின் ஆதரவோடு தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழங்கி வருவது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை நாசமாக்கும் இந்த கட்சிகளிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; இவை அபாயத்தின் அறிகுறியாகும்.

வளர்ச்சி அடைந்த தமிழகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றினைந்து போராட வேண்டும். வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கியே தீருவோம்.

இவ்வாறு மோடி பேசினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்