சாதுர்யம் இருந்தால் தமிழகம் சாதித்துக் கொள்ளலாமே! - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி
மத்திய - மாநில நிதி பகிர்வு முறை குறித்து, பாமர மக்களுக்குப் புரியாது; வாஸ்தவம். ஆனால், புரிந்து கொள்ள வேண்டிய, புரிந்து கொள்ளும் இடத்தில் உள்ள, அதைக் கையாள வேண்டிய அரசியல்வாதிகளே புரிந்து கொள்ளவில்லை என்பது வேதனை தான்.
சீராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நடைமுறையை சரியில்லை என்று ஒருவர் சொன்னால், 'ஓ... அப்படியா?' என்று கேட்கிறோம். அதையே பலரும் சொன்னால், 'விஷயம் இல்லாமல் சொல்ல மாட்டாங்கய்யா...' என, 'கமென்ட்' அடிக்கிறோம். அதையும் தாண்டி, 'அது என்னவாக இருக்கும்' என்று தெரிந்து கொள்ளக் கூடிய ஆர்வமும் ஏற்படும்.அந்த வகையைச் சேர்ந்தது தான், நமக்கும், மத்திய அரசுக்குமான ஜி.எஸ்.டி., வரிச் சண்டை.
'ஜி.எஸ்.டி., இழப்பீடு குறைந்த அளவே மாநிலத்துக்கு வந்தது, இழப்பீட்டையே நிறுத்தி விட்டது மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சிக்கிறது' என, பட்டிதொட்டியெல்லாம் மேடை போட்டு பேசி வருகின்றனர்.
இது தவிர, தமிழக அரசுக்கு கடன் வாங்கக் கூட முடியவில்லை என்ற கருத்து நிலவுகிறது. இதே நிலை தான் நீடிக்குமா, நாம் நிமிர்ந்தெழவே முடியாதா என்ற மாநிலம் சார்ந்த கேள்விகளும், '5 ரூபாய்க்கு பூ வாங்கினால் கூட, 'பேடிஎம்' பயன்படுத்தி பணம் செலவழித்தோமே, அதன் நிலை தற்போது சந்தி சிரிக்கிறதே' என்ற சமூகம் சார்ந்த கேள்விகளும், கவலைக் கோடுகளை நம் மனதில் உருவாக்கி விட்டிருக்கின்றன.
'நமக்கு உண்மை தெரிஞ்சாகணும்' என்ற, 'தினமலர்' வாசகர்களின் வேட்கைக்கு தீனி போட, சிறப்பு நிருபர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, பிரத்தியேகமாய் பேட்டி எடுத்தார். அனைத்து விஷயங்களுக்கும், மிகத் தெளிவாக பதில் கொடுத்திருக்கிறார் அமைச்சர்.
இனி கேள்வியும், பதிலும்
ஜி.எஸ்.டி., இழப்பீடு நிறுத்தப்பட்டதால் ஒவ்வொரு ஆண்டும், மாநிலத்துக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக, சமீபத்தில் தமிழக அரசு, சட்டசபையில் தெரிவித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட ஜி.எஸ்.டி., இழப்பீடு காரணமாக, ஏதேனும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதா? அவ்வாறு ஏற்பட்டிருந்தால் அதை தமிழக அரசால் ஏன் ஈடுகட்ட முடியவில்லை? பிற மாநிலங்கள் இதுபோன்று இழந்த வருவாயை ஈடுகட்டி விட்டனவா?
இது முற்றிலும் புரிதல் குறைபாடான வாதமாக உள்ளது. ஜி.எஸ்.டி., இழப்பீடு நிறுத்தப்பட்டது, திடீரென எடுத்த முடிவு கிடையாது. கடந்த 2017ம் ஆண்டு ஜி.எஸ்.டி., சட்டம் அமல் படுத்தப்பட்டபோதே, 'இழப்பீடு ஐந்து ஆண்டுகளுக்குத் தான்' என தெரிவிக்கப்பட்டு விட்டது. ஜி.எஸ்.டி., சட்டத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இழப்பீடு கொடுப்பதற்கு இடம் இல்லை.இந்த இழப்பீடு எப்படி கணக்கிடப்பட்டது?
மாநிலங்களின் பொருளாதாரம் வளர வளர, அவற்றின் வரி வருவாயும் அதிகரிக்கும். உதாரணமாக, பொருளாதாரம் எட்டு சதவீதம் வளர்கிறது என்றால், வரி வருவாயும் எட்டு சதவீதமாவது வளர வேண்டும். இழப்பீடை கணக்கிடுவதற்காக, ஒவ்வொரு மாநிலமும் 14 சதவீதம் வளரும் என அனுமானிக்கப்பட்டது. உண்மையில் சராசரி வளர்ச்சி விகிதம் ஐந்து சதவீதமாகத் தான் இருந்தது.
மாநிலத்தின் அசல் வளர்ச்சிக்கும், 14 சதவீதத்திற்குமான வித்தியாசம் தான் இழப்பீடாக கொடுக்கப்பட்டது. ஒரு மாநில பொருளாதாரத்தின் அளவு, ஒரு லட்சம் கோடி ரூபாய் என்றும் அதன் வரி வருவாய், 20 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் வைத்துக் கொள்வோம். அது, ஓராண்டில் ஐந்து சதவீதம் வளர்ந்தால், அதன் பொருளாதாரத்தின் அளவு, 1.05 லட்சம் கோடி ரூபாயாகவும், அதன் வரி வருவாய் 21 ஆயிரம் கோடி ரூபாயாகவும் இருக்கும்.
ஜி.எஸ்.டி., இழப்பீடை கணக்கிடுவதற்கு 14 சதவீதம் வளர்ச்சி என அனுமானித்துக் கொண்டோம் அல்லவா... அதனால், அனுமான வளர்ச்சியின் படி பொருளாதாரத்தின் அளவு 1.14 லட்சம் கோடி என்றும், வரி வருவாய் 22.80 ஆயிரம் கோடி ரூபாய் எனவும் இழப்பீடிற்காக கணக்கிடப்படும். அனுமான வருவாய்க்கும், அசல் வருவாய்க்குமான வித்தியாசம், அதாவது, 1,800 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும். இது தான் இழப்பீடு வழங்கும் முறை.
கூறுவதற்கு எதுவும் இல்லை
மாநிலங்களின் சராசரி அசல் வளர்ச்சி, ஐந்து சதவீதமாக இருந்த போதும், 14 சதவீதம் என ஏன் அனுமானிக்கப்பட்டது? மாநிலங்களை ஜி.எஸ்.டி.,யில் தயக்கமில்லாமல் சேர ஊக்குவிக்கத் தான்! இடையில், கோவிட் காலத்தில் வரி வருவாய் பெரும் அடி வாங்கிய போதும் ஜி.எஸ்.டி., கவுன்சில், இழப்பீடை கொடுக்காமல் இருக்கவில்லை. எப்படி கொடுத்தது? கடன் வாங்கி கொடுத்தது. இதை அடைக்க தான் 'ஸெஸ்' விதித்துள்ளோம். அதுவும் மார்ச் 31, 2026ல் அடைந்தவுடன், விலக்கப்படும்.
அந்த நேரத்தில் ஜி.எஸ்.டி., இல்லை என்றால் என்னவாகி இருக்கும்? மாநிலங்களின் நிதி நிலை மொத்தமாக நலிந்து இருக்கும். ஜி.எஸ்.டி.,யால் தானே இழப்பீடை பெற்று வருவாய் பற்றாக்குறை இல்லாமல் சமாளிக்க முடிந்தது? அதனால், மத்திய அரசை இதில் குறை கூறுவதற்கு எதுவும் இல்லை. தமிழக அரசு உட்பட அனைவருக்கும், ஜூன் 30, 2022 உடன் இழப்பீடு நின்றுவிடும் என்று, 2017ல் ஜி.எஸ்.டி.யில் சேரும்போதே தெரியும்!
அப்படியானால், அதை இழப்பீடு என்பதைவிட ஊக்கத்தொகை என்றால் தான் சரியாக இருக்கும்...
இல்லை. அது இழப்பீடு தான். ஜி.எஸ்.டி., நடைமுறைக்குள் வருவதால், வருவாய் இழப்பு ஏற்படுமேயானால், ஈடு செய்யும் வகையில் தான் வகுக்கப்பட்டது.
தமிழகம் ஜி.எஸ்.டி.,க்குள் வந்ததால் வருவாய் இழப்பு ஏற்பட்டதா?
அதை மாநில அரசு தான் கூற வேண்டும். 17 வகையான மறைமுக வரியையும், ஐந்து விதமான செஸ்ஸையும் உள்ளடக்கியதாகவே ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், மதுபானம் ஆகியவை ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வரப்படவில்லை. தமிழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தால், அது எதனால் ஏற்பட்டிருக்கும் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை.
கடந்த 2022ம் ஆண்டு நிறுத்தப்பட்ட ஜி.எஸ்.டி., இழப்பீடு, அதன் பிறகும் வழங்கப்படும் என கணக்கிட்டு, அதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக, தமிழக அரசு கூறுகிறது என நினைக்கிறேன். அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்தே ஐந்து ஆண்டுகளுக்குத் தான் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகும் வழங்கப்படும் என கணக்கில் கொண்டு, அதனை இழப்பாக அறிவிப்பது சரியாகாது.
உண்மையில், ஜி.எஸ்.டி.,யால் மாநிலங்களுக்கு நன்மை தான் ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.,க்கு முன் 2012- -15 காலகட்டத்தில் மாநிலங்களின் சராசரி வருவாய் வளர்ச்சி ஒன்பது சதவீதமாக இருந்தது. ஜி.எஸ்.டி.,க்கு பின் 14.80 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஜி.எஸ்.டி.,க்கு முன் வரி வருவாய் வளர்ச்சி ஆண்டுக்கு 12.30 சதவீதமாக இருந்ததாக, தமிழக வணிக வரித்துறை கூறியதாக, நாளிதழில் வாசித்தேன்.
வேகமாக வளர்கிறது
ஜி.எஸ்.டி.,க்கு பின் தமிழகத்தின் வரி வருவாய் வளர்ச்சி 14.80 சதவீதம் என்றாலும்,தமிழக அரசுக்கு லாபம் தானே! இது தவிர, 'டேக்ஸ் பாயன்ஸி' எனப்படும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப வரி வருவாய் வளர்ச்சி, ஜி.எஸ்.டி.,க்கு பின் செம்மையாகி உள்ளது. முன்பு பொருளாதார வளர்ச்சியை விட மெதுவாகத்தான் வரி வருவாய் வளர்ந்து வந்தது. இப்போது பொருளாதார வளர்ச்சியைவிட வேகமாக வளர்கிறது.
கேள்வி: ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்ற வாதத்திற்கு மீண்டும் வருவோம். உண்மையில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீடு எவ்வளவு?
கடந்த 2017 - 18ல் 632 கோடி ரூபாய்;2018 - 19ல் 3,151 கோடி ரூபாய்;2019- 20ல் 8,922 கோடி ரூபாய்;2020 - 21ல் 11,141.91 கோடி ரூபாய்;2021- 22ல் 6,696.72 கோடி ரூபாய்;2022 - 23ல் 16,214.83 கோடி ரூபாய்;2023 - 24ல் 3,532 கோடி ரூபாய்
என மொத்தம், 50,291.09 கோடி ரூபாய்
ஐந்தாண்டுகளில் இழப்பீடாக கொடுக்கப்பட்டு உள்ளது. ஐந்தாண்டுகளுக்கு மேலாக கணக்கு ஏன் நீள்கிறது என்றால், தமிழக அரசு தாமதமாக தகவல்களை சமர்ப்பித்தது. இதை பார்த்தால் உங்களுக்கே புரியும்
வரி வருவாய் பங்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாக தமிழக அரசு சொல்கிறதே?
எந்த வரி என்று குறிப்பிட வேண்டும். நேரடி வரி இருக்கிறது, ஜி.எஸ்.டி., இருக்கிறது. ஜி.எஸ்.டி.,யை பொறுத்தளவில் எஸ்.ஜி.எஸ்.டி.,யில் 100 சதவீதம் மாநில அரசுக்குத்தான் போகும். ஐ.ஜி.எஸ்.டி., செட்டில்மென்ட் அடிப்படையில், 50:50 என்ற விகிதாசாரத்தில் மாநிலங்களுக்கு இடையே பங்கிட்டுக் கொள்ளப்படுகிறது.
சி.ஜி.எஸ்.டி., மத்திய அரசுக்கானது. அதில் 41 சதவீதம் மாநிலத்திற்கு கொடுக்கப்படுகிறது; மீதம் தான் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது.இப்படி பொத்தாம்பொதுவாக குற்றச்சாட்டு வைப்பது, தவறான தகவலை பரப்புவதே வாடிக்கை யாகிவிட்டது. உண்மையில் பதில் வேண்டுமானால், ஆதாரத்தோடு என்னை எதிர்கொள்ளலாம்; நான் சுய பரிசோதனைக்கு என்னை ஆட்படுத்திக் கொள்கிறேன்.
பா.ஜ., ஆளும் மாநிலங்களே அதிகம் உள்ளதால் ஜி.எஸ்.டி., கவுன்சிலில் தமிழக குரல் எடுபடவில்லை; மத்திய அரசின் திட்டம் தான் செயலுக்கு வருகிறது என்கின்றனர். மத்திய அரசு எங்கே ஆதிக்கம் செலுத்தியது? கவுன்சிலின் அமர்வுகள், முற்றிலும் பதிவு செய்யப்படுகின்றன. தலைமை வகிக்கும் மத்திய அரசு, அனைத்து தரப்பும் பேசி முடிக்கும் வரை தன் கருத்தை தெரிவிப்பதில்லை.
இந்தியில் ஒரு பழமொழி சொல்வர். அதன் சாராம்சம், 'உன் மீது நான் தயிரை வீசிவிட்டு போய்விடுவேன்; நீ துடைத்துக் கொள்' என்பது. அதாவது இவர்கள் அவதுாறு பரப்பிவிட்டு சென்றுவிடுவர்; நாங்கள் எங்கள் செயல்களை நியாயப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும். இதுதான் இவர்களுடைய நடைமுறை. ஒரு பொய்யை நுாறு முறை சொன்னால் மக்கள் நம்பிவிடுவர் என்று இப்படி செய்கின்றனர்.
ஜி.எஸ்.டி.,யில் வரவேண்டியதை தாமதப்படுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே...
'யுடிலைசேஷன் சர்டிபிகேட்டை' கொடுத்தால், வர வேண்டியது வரப்போகிறது... அதை ஒழுங்காக கொடுத்து விட்டு, என்னை பார்லிமென்டில் கேள்வி கேட்கட்டும்! நான் பல முறை பார்லிமென்டில், மாநிலங்களுக்கு தாமதத்தை பற்றி நினைவூட்டிவிட்டேன்!
@ஒரு எல்லை வேண்டாம்?
@
கர்நாடகா, கேரளா, தமிழகம் - தங்களுக்கு வரி பங்கீடு, உதவித்தொகை, நிவாரணத்தொகை என அனைத்திலும் அநீதி இழைக்கப்படுவதாக போராட்டமே நடத்தினரே... முதல்வர் ஸ்டாலின், 'தெற்கு தான் வடக்கிற்கு சோறு போடுகிறது' என்றுகூட சொல்லியிருக்கிறார்.
அது பிரிவினைவாத கட்சியின் மொழி. முதல்வர் அந்த கட்சியை சேர்ந்தவர் தானே! தெற்கு, வடக்கிற்கு சோறு போடுகிறதா? என் பெற்றோர் தலைமுறையில், 'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' என்பர். அப்போது, வடக்கு தான் தெற்கிற்கு சோறு போட்டதா? இப்படிப்பட்ட அரசியலுக்கு ஒரு எல்லை வேண்டாம்?
தமிழகத்தில் இருந்து கிடைக்கும் வரி வருவாயைவிட அதற்கு அதிகம் தான் கொடுக்கப்படுகிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அவர்களோ, ரூபாய்க்கு 25 காசு தான் திருப்பி வருகிறது என்கிறார்கள். நீங்கள் வாரிக் கொடுத்தால் அவர்கள் ஏன் புகார் செய்கின்றனர்?
ஏற்கனவே ஜி.எஸ்.டி., வரி எப்படி பிரிக்கப்படுகிறது என்பதை பற்றி சொல்லிவிட்டேன். அதில், மத்திய அரசின் பங்கில், எவ்வளவை தமிழகத்தில் மீண்டும் முதலீடு செய்திருக்கிறோம் என்று பாருங்கள். தமிழகத்தில் உற்பத்தியாகும் பொருள் தமிழகத்தில் மட்டும் தான் வாங்கப்படுகிறதா என்ன? மொத்த நாடும் அதற்கான சந்தை இல்லையா? தமிழகத்திற்கு, அதனிடம் இருந்து கிடைக்கும் வருவாயை விட, அதிகம் தான் கொடுத்திருக்கிறோம்.
நாங்கள் தமிழகத்திற்காக செலவு செய்தோம் என்கிறீர்களே; எங்கே செலவு செய்யவேண்டும் என்பதை தமிழகமே முடிவு செய்தால் தானே சரியாக இருக்கும்?
நாங்கள் செலவு செய்வது, எங்கள் பங்கு வரியில் இருந்து தான். ஆக தமிழகத்தில் இருந்து கிடைத்த வரியின் எங்கள் பங்கை மீண்டும் தமிழகத்தில் முதலீடு செய்கிறோம். அதை தமிழக அரசே முடிவு செய்ய வேண்டும் என்ற வாதத்தை ஏற்றோமானால், கோவையில் இருந்து கிடைக்கும் வருவாயை செலவு செய்வது பற்றி, கொங்கு நாடே முடிவு செய்யட்டும் எனச் சொல்லலாமே! அதேபோல் சென்னை... அப்போது, கோவில்பட்டிக்கும், திருநெல்வேலிக்கும் யார் செலவு செய்வர்? இதெல்லாம் வெறும் பிரிவினை பேச்சு.
தற்போது, 16வது நிதி குழு தன் பணிகளை துவக்கியுள்ளது. இதில் தென் மாநிலங்கள் என்ன எதிர்பார்க்கலாம்? அவர்களுடைய (வரி பங்கீடு). கவலைகளுக்கு தீர்வு காணப்படுமா? வரி வருவாய் பகிர்வில், புதிய முறை உருவாக்கப்படுமா?.
இந்த கேள்வியை கேட்டதற்கு மகிழ்ச்சி. இதற்கு புள்ளி விபரங்களை வைத்து வாதிட்டு பதில் தராமல், நான், தென் மாநிலங்களுக்கு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். குறிப்பிட்ட அரசால் என்றில்லாமல், தென் மாநிலங்கள், பல தசாப்தங்களாக, மனிதவள மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. உதாரணமாக, நாட்டின் நிதி அமைச்சராக அல்ல; தமிழகத்தில் பிறந்து வளர்ந்த ஒருவராக சொல்கிறேன்... தமிழகமும், பிற தென் மாநிலங்களும், ஜனத்தொகை கட்டுப்பாட்டில் வட மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன.
அதற்காக, 'நாங்கள் சாதித்தோம்; அவர்கள் சாதிக்கவில்லை. அதனால் அவர்களுக்கு கொடுக்கக்கூடாது' என்பது சரியான வாதமாக இருக்காது. மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்ற வாதம், நிதி குழுவில் எடுபடுமா என்று தெரியவில்லை. மாறாக, நிதி பங்கீட்டை முடிவு செய்யும் போது, மனிதவள மேம்பாட்டு சாதனைகளுக்கு கூடுதல் மதிப்பு அளிக்க வேண்டும் என்று, நிதி குழுவிடம் வாதிடவேண்டும். ஒவ்வொரு தசாப்தத்திலும் ஜனத்தொகை எவ்வாறு குறைந்துள்ளது, அதற்கு காரணிகள் என்ன, அதனால் மாநிலத்திற்கு கிடைத்த லாபம் என்ன என்று புள்ளிவிபரங்களோடு வாதிட வேண்டும். அதே நேரம், சாதனைகளுக்காக மாநிலம் தண்டிக்கப்படக் கூடாது என்பதையும், முன்வைக்க வேண்டும்.
மத்திய அரசை குறை சொல்லக்கூடாது
மாநிலங்களின் அரசியல் தலைமையும் அதிகாரிகளும் சாதுர்யமாக இருந்தனர் என்றால், அவர்கள் நினைப்பதை நிதிக்குழுவில் சாதிக்கலாம். அதை விடுத்து, மத்திய அரசை குறை சொல்லக்கூடாது. நான் வரி பங்கீட்டில் என் இஷ்டம் போல் செயல்படுகிறேன் என்று அவர்கள் (மாநிலங்கள்) நினைக்கின்றனர். இல்லவே இல்லை. முந்தைய நிதி குழு நிர்ணயித்த விகிதாசாரத்தை மட்டும் தான் 100 சதவீதம் கடைபிடிக்கிறேன். நிதிக்குழு முடிவு செய்கிறது, நாங்கள் கடைபிடிக்கிறோம். எங்களை வஞ்சிப்பானேன்?
நீங்கள் சொல்வதை பார்த்தால், நிதிக்குழுவின் இறுதி பரிந்துரையில் மத்திய அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று சொல்வதுபோல் இருக்கிறதே...
இம்மியளவும் இல்லை. 'டேர்ம்ஸ் ஆப் ரெபரன்ஸ்' அதாவது என்ன வேலையை செய்ய வேண்டும்,அதன் வரம்பு என்ன என்பதை வரையறுப்பதை தவிர, எங்களுக்கு வேறு எந்த பங்கும் இல்லை. நிதி குழுவிடம் மாநிலங்களிடையே வரி வருவாயை எப்படி பங்கிடவேண்டும் என்பதற்கான சூத்திரத்தை (பார்முலா) உருவாக்கிக்கொடுங்கள் என்பதை தெரிவிப்பதோடு எங்கள் பங்கு முடிந்துவிட்டது. நிதி குழுவின் 'கோர் ரெக்கமண்டேஷன்ஸ்' எனப்படும் பிரதான பரிந்துரைகளை நான் (சட்டப்படி) எற்றுக்கொண்டாகத் தான் வேண்டும். உபரி பரிந்துரைகளை மட்டும் ஏற்கலாமா வேண்டாமா என மத்திய அரசு பரிசீலனை செய்து கொள்ளலாம்.
உதாரணமாக, கடந்த (15வது) நிதி குழு, ஜார்க்கண்டில் ஒரு ஜோதிர்லிங்க கோயிலை புனரமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்ற உபரி பரிந்துரையை கொடுத்து இருந்தது. அதை நாங்கள் ஏற்கவில்லை. ஆக, நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், நிதி குழு அரசியல் அமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்டு தன்னிச்சையாக செயல்படும் ஒன்று. அதில் மத்திய அரசுக்கு, சூத்திரம் கோருவதை தவிர எந்த பங்கும் இல்லை.
அப்படியானால், தமிழக அரசுதான், நிதி குழுவை (தங்கள் நிலைப்பாட்டிற்கு) சம்மதிக்க வைக்க வேண்டுமா?
ஆமாம். உங்களுடைய தரப்பை தெரிவியுங்கள். உங்களை யார் தடுக்கப் போகின்றனர்? அதைவிடுத்து, மத்திய அரசுக்கு எதிராக கூச்சல் போடுகிறீர்கள்.
தமிழகத்தின் நிதி நிலைமை எப்படி உள்ளது? எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல், அது மிகவும் மோசமாக உள்ளதா? மேலும் கடன் வாங்க முடியாத நிலைக்கு தமிழகம் தள்ளப்படுமா?
ஒரு மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து கருத்து தெரிவிப்பது முறையாக இருக்காது. கடன் வாங்குவது தொடர்பான பிரச்னை நீங்கள் எழுப்பியதால், அதற்கு விளக்கம் அளிக்கிறேன். எப்.ஆர்.பி.எம்., எனப்படும் நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் நிர்வாகச் சட்டத்தின்படி, மாநிலங்களின் நிதி பற்றாகுறை, மூன்று சதவீதம் வரை இருக்கலாம். அதாவது, அந்த அளவிற்கு சில நிபந்தனைகளுடன் கடன் வாங்கலாம்.
கடந்த, 2020ல் கொரோனா காலத்திலும், அதன் பிறகும், மூன்று சதவீதத்துக்கு மேல், 0.50 சதவீதம் வரை கூடுதல் கடன்களை மாநிலங்கள் வாங்கிக் கொள்ள அனுமதியளித்தோம். சில சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி தரப்பட்டது. மாநிலங்கள் கடன் வாங்க இந்த சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், கடன் வாங்க வேண்டுமானால், சில சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எதற்காக இந்தக் கட்டுப்பாடுகள் உள்ளன? ஒருங்கிணைந்த, முறையான சீர்திருத்தங்கள் ஏற்படாவிட்டால், வளர்ச்சியை நாம் உறுதி செய்ய முடியாது. இது நானாக எடுத்துக்கொண்ட உரிமை அல்ல. அரசியலமைப்பு சட்டத்தின், 293வது பிரிவின்படி, மாநிலங்களின் கடன்களை கண்காணிக்க மத்திய அரசுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நிதி ஏன் டாஸ்மாக்கை நம்பி உள்ளது. பூரண மதுவிலக்கு உள்ள குஜராத் எப்படி சமாளிக்கிறது?
அதுதான் திராவிட மாடல். அவர்களுக்கு குஜராத் மாடல் பிடிக்காது. தொழில்துறையினர், விதிகளில் ஸ்திரத்தன்மை இல்லாதது குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். ரிசர்வ் வங்கியின் சமீபத்திய உத்தரவுகளால், 'பேடிஎம்' தத்தளிக்கிறது, விசா மற்றும் மாஸ்டர்கார்டு வர்த்தக கார்டுகள் வாயிலான பரிவர்த்தனையை நிறுத்தியுள்ளன. சாதாரணமாக, இதுபோன்ற ஒரு தனிப்பட்ட நிறுவனம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புக்கு இடையேயான விவகாரத்தில் நான் கருத்து தெரிவிப்பதில்லை. அப்போது கட்டுப்பாட்டு சூழலை மையப்படுத்தி கூறுங்கள்.
சூழல் முறை பொதுவாக சரியாக உள்ளது. அவை, சில நிர்வாகப் பிரச்னைகளை சுட்டிக் காட்டுகின்றன. ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனை தளம் அல்லது கார்டு விஷயத்தில், அவர்கள் அத்தியாவசிய தகவல்களை சரிபார்ப்பதில் கவனமாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதை ஆர்.பி.ஐ., கூறியுள்ளது. ஆர்.பி.ஐ., கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். அதனால், ஒட்டுமொத்த தொழில்களையும் ஆர்.பி.ஐ., குறிவைக்கிறது என, கூற முடியாது.
ஆனால், இந்த நிறுவனங்களுக்கு அவகாசம் அளிக்கவில்லையே... அவற்றின் தொழில் முடங்கியுள்ளதே?
அது சரிதான். நீங்கள் எந்த நேரத்திலும், ரிசர்வ் வங்கியை அணுகலாம். அவர்களுக்கு என்று சில நடைமுறைகள் உள்ளன. உரிய அவகாசம் அளிக்கப்பட்டிருக்கலாம் என்பதை ஏற்கிறேன். ஆனால், இந்த குறிப்பிட்ட விவகாரத்தில் உண்மையான பிரச்னை எனக்கு தெரியவில்லை.
நிதிப் பற்றாக்குறையை குறைக்க நீங்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள். ஆனால்,சர்வதேச கிரெடிட் ரேட்டிங் எனப்படும் கடன் தர குறியீட்டு அமைப்புகள், நம் நாட்டுக்கான தர குறியீட்டை உயர்த்தவில்லையே...
இது மிகவும் கடினமான ஒன்று. நம் நாட்டின் பேரியல் பொருளாதாரக் குறியீடுகள் வலுவாக உள்ளன; ஸ்திரமாக உள்ளன என்பதை, அந்த அமைப்புகளுக்கு நாம் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறோம். ஆனாலும், அவர்கள் மசியவில்லை. தற்போது பல நாடுகள் பொருளாதார மந்த நிலையில் உள்ளன.
ஜப்பான் ஏற்கனவே மந்த நிலைக்கு சென்றுள்ளது. அமெரிக்கா கடினமான கட்டத்தில் உள்ளது. பிரிட்டனும், ஜெர்மனியும் மந்தநிலையை சந்திக்கிறன. ஆனால், அந்த நாடுகள் குறித்த தரவரிசை குறியீடு உடனடியாக குறையாது. அதே நேரத்தில், ஒரு காலாண்டில், ஏதாவது ஒரு காரணியால் பாதிப்பு ஏற்பட்டால், நம்முடைய நாட்டின் மீதான கணிப்பு உடனடியாக பாதிக்கப்படுகிறது.
அப்படியானால், இந்த தர அமைப்புகள் இந்தியாவுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றனவா?
இது இந்தியாவுக்கு எதிராக மட்டும் காட்டப்படுகிறதா என்பது எனக்கு தெரியவில்லை.அப்படி முத்திரை குத்தவும் விரும்பவில்லை. ஆனால், ஆரோக்கியமான விவாதத்துக்கு அவர்கள் தயாராக இல்லை.
வாசகர் கருத்து