வயநாடு வேண்டாம்... உ.பி.,யில் போட்டியிடுங்கள்: ராகுலுக்கு செக் வைத்த டி.ராஜா மனைவி
லோக்சபா தேர்தலில் கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வயநாட்டில் ஆனி ராஜா போட்டியிட உள்ளதாக வெளியான அறிவிப்பு, காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசில் இரண்டாவது கட்சியாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. லோக்சபா தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வரும், இ.கம்யூ., தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, கட்சியின் மாநில செயலாளராக இருக்கும் பினோய் விஸ்வம், ஆனி ராஜா, பனியன் ரவீந்திரன், சுனில்குமார், அருண்குமார் ஆகியோரது பெயர்களை அறிவித்துள்ளது.
இதில், ஆனி ராஜா வயநாடு தொகுதியில் களமிறங்க உள்ளார். இங்கு ஏற்கெனவே காங்., கட்சியின் ராகுல்காந்தி எம்.பி.,யாக உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் அமேதி, வயநாடு என இரு தொகுதிகளில் போட்டியிட்டார், ராகுல் காந்தி. இதில், அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியும் தோல்வியடைந்தார்; வயநாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்தமுறை ராகுலை எதிர்த்துக் களமிறங்கும் ஆனி ராஜா, இ.கம்யூ., கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆவார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து பேசியுள்ள ஆனி ராஜா, "கடந்தமுறையும் வயநாட்டில் இ.கம்யூ., போட்டியிட்டது. இந்தமுறையும் களமிறங்கியுள்ளோம். இங்கு போட்டி என்பது எல்.டி.எப் மற்றும் யு.டி.எப் ஆகியவற்றுக்கு இடையில்தான். எல்.டி.எப் அணியில் நீண்டகாலமாக இந்த நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு வருகிறோம். அதில், எந்த மாற்றமும் இல்லை" என்றார்.
'இண்டியா' அணியில் இ.கம்யூ., போட்டியிடுவதால் ராகுலை எதிர்த்து எம்மாதிரியான பிரசாரத்தை காங்கிரஸ் முன்னெடுக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்குப் பதில் அளித்துள்ள இ.கம்யூ., மாநில செயலாளர் பினோய் செல்வம், " வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், பிரசாரத்தின்போது பா.ஜ.,வை காங்கிரஸ் எதிர்க்கப் போகிறதா அல்லது எல்.டி.எப்-ஐ எதிர்க்கப் போகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
பா.ஜ.,வை எதிர்ப்பதாக இருந்தால் அவர் உ.பி.,யில் தான் போட்டியிட வேண்டும். 'இண்டியா' அணியில் உள்ள எங்களை எதிர்த்து போட்டியிடுவதைவிட, உ.பி.,யில் மிகப் பெரிய போர் ஒன்றை நடத்துவதை ராகுல்காந்தி கைவிடுவது சரியாக இருக்காது.
தவிர, கேரளாவில் உள்ள சிறுபான்மையின மக்களும் மதச்சார்பற்ற கொள்கை உள்ள இந்துக்களும் காங்கிரசின் மதச்சார்பற்ற கொள்கை மீது சந்தேகம் அடைந்துள்ளனர். ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரசின் தெளிவற்ற நிலைப்பாடு, லோக்சபா தேர்தலில் எல்.டி.எப் அணிக்கே சாதகமாக உள்ளது.
காங்கிரசுக்கு வாக்களிப்பது என்பது, பா.ஜ.,வுக்கு வாக்களிப்பது போல என கேரள மக்கள் நினைக்கின்றனர். இந்த விவகாரத்தில் அரசியல் தெளிவுடன் காங்கிரஸ் முடிவெடுக்க வேண்டும்".
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து