Advertisement

பா.ஜ.,வில் ஐக்கியமாகும் கமல்நாத்? - ம.பி., அரசியலில் புது பரபரப்பு

போபால்: காங்கிரஸ் மூத்த தலைவரும், ம.பி., முன்னாள் முதல்வருமான கமல்நாத், மகன் நகுல், பா.ஜ.,வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதனை காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் மறுத்துள்ளார்.

இதனிடையே, கமல்நாத் டில்லி விரைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் கமல்நாத். இவர், ம.பி., மாநில முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், அம்மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகளை வகித்துள்ளார்.

முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆட்சியின் போது மத்திய அமைச்சர் பதவியை வகித்துள்ளார். இவரது மகன் நகுல், சிந்த்வாரா தொகுதியில் இருந்து எம்.பி., ஆக உள்ளார். வரும் தேர்தலில், மீண்டும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். ஆனால், கட்சி மேலிடம் இது பற்றி எதுவும் கூறவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் ம.பி., மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் பா.ஜ.,வில் இணைந்தனர். அப்போது பேசிய அம்மாநில பா.ஜ., தலைவர் விடி சர்மா, பா.ஜ.,வின் கதவுகள் திறந்தே உள்ளன. இன்னும் பலர் கட்சியில் இணைவார்கள் எனக்கூறினார். இதனைத் தொடர்ந்து, கமல்நாத்தும், நகுலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைவார்கள் என தகவல்கள் பரபரப்பாக வெளியாக துவங்கின.

இச்சூழ்நிலையில், நகுல் தனது சமூக வலைதள பக்கத்தில் சுய விவரக்குறிப்பில் இருந்து காங்கிரஸ் பெயரை நீக்கினார். இது, பா.ஜ.,வில் சேரப்போவதாக வெளியாகும் தகவல்களுக்கு வலு சேர்த்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தில் இவ்வாறு பரபரப்பு கிளம்பியுள்ள நிலையில், சிந்த்வாரா பகுதியில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு இருந்த கமல்நாத் தனது பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு டில்லி சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் பா.ஜ., தலைவர்களை சந்திக்க உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகின. கமல்நாத்துடன் 14 எம்.எல்.ஏ.,க்கள் சேரலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங் கூறுகையில், கமல்நாத் பா.ஜ.,வில் சேரப்போகிறார் என்ற தகவல்கள், பரபரப்புக்காக மீடியாக்கள் கிளப்பிவிட்ட வதந்தி. நான் அவருடன் பேசினேன். அவர் சிந்த்வாராவில் உள்ளார். தனது அரசியல் வாழ்க்கையை சோனியா குடும்பத்துடன் சேர்ந்து கமல்நாத் துவக்கினார்.

காங்கிரஸ் கட்சிக்காக உறுதியாக நிற்கிறார். சோனியா குடும்பத்துடன் நெருக்கமாக உள்ள அவர், எப்படி கட்சியை விட்டு செல்வார். ஜனசங்கம், இந்திராவை சிறையில் அடைக்க முயற்சித்த போதும், காங்கிரஸ் கட்சிக்கு உறுதியுடன் ஆதரவு தெரிவித்தவர் கமல்நாத். இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரத்தில் இந்த தகவலை கமல்நாத் மறுக்கவோ, ஆதரிக்கவோ, நிராகரிக்கவோ இல்லை.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்