ராஜ்யசபாவுக்கு நட்டா - சோனியாவை தேர்வு செய்ததன் பின்னணி என்ன?
-- நமது சிறப்பு நிருபர் -
இரண்டு மிகப் பெரும் அரசியல் கட்சிகளான பா.ஜ., மற்றும் காங்கிரஸ், இரண்டு முக்கியமான தலைவர்களை ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வைத்துள்ளது, அரசியலில் சுவாரசியத்தை ஏற்படுத்திஉள்ளது.
எந்த நேரத்தில் எந்த முடிவை எடுக்கும் என்பது தெரியாமல், சஸ்பென்ஸ் வைப்பதில் பா.ஜ., கைதேர்ந்தது. அதுபோல் கடைசி நேரம் வரை எந்த முடிவையும் எடுக்காமல் திகில் ஏற்றுவது காங்கிரசின் பாணி.
கோஷ்டி மோதல்
லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பா.ஜ., தன் தேசியத் தலைவர் நட்டாவை, குஜராத்திலும், காங்கிரஸ் அதன் முன்னாள் தலைவர் சோனியாவை, ராஜஸ்தானிலும், ராஜ்யசபாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளன.
ஏன் இந்த இருவரும், மக்களை சந்திக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என்ற கேள்வி ரீங்காரமிட்டு வருகிறது. நட்டா விவகாரத்தில், 2019 ஜூனில் அவர் செயல் தலைவராகவும், அதற்கடுத்த ஆண்டில் தேசியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
தலைமை பொறுப்பை அவர் ஏற்றதில் இருந்து, பல மாநில தேர்தல்களில், பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைத்தது. தொட்டதெல்லாம் துலங்கும் என்ற பேச்சு பரவலாக இருந்த நிலையில், அவருடைய சொந்த மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் கட்சி ஆட்சியை இழந்தது.
இது தனிப்பட்ட முறையில் நட்டாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. அதற்காகத்தான் அவருக்கு லோக்சபா தேர்தலில் வாய்ப்பு தரப்படவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஹிமாச்சலில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், முன்னாள் முதல்வர் ஜெயராம் தாக்குர் வலுவானவர்களாக உள்ளனர். நட்டாவும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், கோஷ்டி மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், லோக்சபா தேர்தலில் நாடு முழுதும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்கு வசதியாக, அதில் முழுமையாக ஈடுபடுவதற்கு வசதியாக, நட்டாவை, ராஜ்யசபா எம்.பி.,யாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், சோனியா, 77, எடுத்த முடிவுக்கான காரணம் வேறு மாதிரியாக கூறப்படுகிறது. கடந்த, 1999ல் இருந்து லோக்சபா எம்.பி.,யாக இருந்து வரும் அவர், உடல்நிலை மற்றும் வயதைக் காரணம் காட்டியுள்ளார்.
அது ஓரளவுக்கு உண்மைதான். அவரது உடல்நிலை, தீவிர பிரசாரத்துக்கு ஒத்துழைக்காது. ஆனாலும், வேறு சில முக்கிய காரணங்களும் கூறப்படுகின்றன. உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியின் எம்.பி.,யாக உள்ள அவர், வரும் தேர்தலில் அங்கு வெற்றி வாய்ப்பு மங்கலாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில், கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மூன்று அல்லது நான்காவது இடத்தையே பிடித்தது.
வெற்றி கிட்டுமா?
மேலும், மாநிலத்தில், ஒட்டுமொத்தமாக, 2.3 சதவீத ஓட்டுகளுடன், இரண்டு சட்டசபை தொகுதிகளில் மட்டுமே வென்றது. தற்போது ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்துள்ளதால், லோக்சபா தேர்தலில் வெற்றி கிட்டுமா என்பது தெளிவில்லாத நிலையை ஏற்படுத்திஉள்ளது.
ராஜிவ் பிரதமராக இருந்தபோது, 1991 முதல், புதுடில்லியில் உள்ள, 10 ஜன்பத் சாலை பங்களாவில் சோனியா வசித்து வருகிறார்.
வாசகர் கருத்து