இன்னொரு பதவிக் காலத்தை மக்கள் கொடுப்பார்கள்: பிரதமர் மோடி உறுதி
"இந்த நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்தவர்கள் தங்களின் அடையாளமாக வைத்திருந்த ஊழல், வகுப்புவாதம், ஓட்டு அரசியல் ஆகியவற்றில் இருந்து தேசத்தை பா.ஜ., விடுவித்துள்ளது" என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.,வின் ஸ்தாபன தினத்தை ஒட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது:
தேசம் தான் முதலில் என்ற கோஷத்துடன் பணியாற்றும் பா.ஜ.,தான் இந்தியாவின் விருப்பமான கட்சி என்பதை மிகுந்த நம்பிக்கையுடன் என்னால் சொல்ல முடியும். வளர்ச்சி, நல்லாட்சி, நாட்டின் விழுமியங்களைக் காக்க அர்ப்பணிப்புடன் செயல்படுவதில் பா.ஜ., முத்திரை பதித்து வருகிறது.
தொண்டர்களால் பா.ஜ., இயங்குகிறது. அது, இந்தியாவின் 140 கோடி இந்தியர்களின் கனவுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்தியாவை தலைமை தாங்குவதற்கான கட்சியாக பா.ஜ.,வை இந்திய இளைஞர்கள் பார்க்கின்றனர். பா.ஜ., அரசின் திட்டங்கள் ஏழைகளுக்கும் பட்டியலின சமூக மக்களுக்கும் வலிமையை கொடுத்துள்ளது.
பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள மக்கள், தங்களுக்கு குரல் கொடுக்கும் கட்சியாக பா.ஜ.,வை பார்க்கின்றனர். ஒவ்வொரு இந்தியரின் வாழ்கை எளிதாக்கும் வகையில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் நாம் பாடுபட்டுள்ளோம்.
இந்த நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்தவர்கள் தங்களின் அடையாளமாக வைத்திருந்த ஊழல், வகுப்புவாதம், ஓட்டு அரசியல் ஆகியவற்றில் இருந்து தேசத்தை பா.ஜ., விடுவித்துள்ளது.
நாட்டின் வளர்ச்சியின் பலன்கள் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் ஏழைகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வெளிப்படையான நிர்வாகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
மாநில அளவிலான விருப்பங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி தேசிய அளவிலான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதிலும் என்.டி.ஏ.வின் ஓர் அங்கமாக பா.ஜ இருக்கிறது. இந்தக் கூட்டணி இந்தியாவின் பன்முகத்தன்மையை உள்ளடக்கியதாக உள்ளது.
புதிய லோக்சபாவை தேர்வு செய்ய நாடு தயாராகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை சீர்செய்திருக்கிறோம். அந்த நிலத்தில் கட்டடத்தைக் கட்டி எழுப்பும் வகையில் இன்னொரு பதவிக்காலத்தைக் கொடுத்து மக்கள் நம்மை ஆசிர்வதிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து