'இனி மோடி பெயர் திரு. 28 பைசா' உதயநிதி பிரசார உத்தி
சென்னை கொளத்துார் ஜி.கே.எம். காலனியில், கொளத்துார், திரு.வி.க., நகர் சட்டசபை தொகுதி தி.மு.க., பாக முகவர்கள் மற்றும் பாக நிலை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
அதில் தலைமையேற்ற அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
இந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், என்னென்ன வடை சுட்டார் என்பது உங்களுக்கு தெரியும். தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.,), ஏழு மாதங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டார்.
அதில், மத்திய அரசு செலவழித்துள்ள 7.5 லட்சம் கோடி ரூபாய்க்கு கணக்கு இல்லை; 1 கி.மீ., சாலை அமைக்க 250 கோடி செலவு; ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில், ரமணா பட பாணியில், இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு, காப்பீடு செய்யப்பட்டது எனப் பல்வேறு குறைகளைக் கூறினர். இவற்றை எல்லாம் கேள்வி கேட்ட ஒரே முதல்வர், இந்தியாவிலேயே ஸ்டாலின் மட்டுமே.
இதற்கெல்லாம் மோடி பதில் சொல்லவே இல்லை.
தற்போது தமிழகத்திற்கு அடிக்கடி வரும் மோடி, சென்னை மற்றும் துாத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது ஏன் வரவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழக மக்கள் மத்திய அரசுக்கு, 5.5 லட்சம் கோடி வரிப்பணம் கட்டியுள்ளனர். நாம் 1 ரூபாய் வரி கட்டினோம் என்றால் மத்திய அரசு அதில், 28 பைசா மட்டுமே திருப்பி தருகிறது. அதனால் தற்போது மோடிக்கு நான் புதிதாக ஒரு பெயர் வைத்துள்ளேன். இனி நான் பாரதபிரதமரை திரு.28 பைசா என்று தான் அழைக்கப் போகிறேன்.
கருணாநிதி முதல்வராக இருந்தவரை 'நீட்' தேர்வு வரவில்லை. ஜெயலலிதாவும் நீட் தேர்வை வரவிடவில்லை. அதன்பின் வந்த அடிமை ஆட்சியில், நீட் தேர்வுக்கு அனுமதி கொடுத்து விட்டனர். இதனால் அனிதா துவங்கி ஜெகதீசன் வரை, 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது தற்கொலை அல்ல; அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் சேர்ந்து செய்த கொலை.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து