'அஸ்வமேத யாகம் நடத்தினால் 3வது முறையும் மோடி பிரதமர்'

ஆட்சி மாற்றம், புதிய பதவியை பிடிப்பது, தேர்தலில் வெற்றி பெறுவது, பிரச்னைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது என பல்வேறு காரணங்களுக்காக அரசியல்வாதிகள் யாகம் நடத்துவது நடைமுறையில் உள்ளது தான். ஆனால், தாமாகவே முன்வந்து 'அஸ்வமேத' யாகம் நடத்தினால், மூன்றாவது முறையும் மோடி தான் பிரதமர் என அடித்துச் சொல்கிறார், தேனி மாவட்டம் லோயர்கேம்ப் சுந்தரவடிவேல் சுவாமி.
ஜெயலலிதா, எடியூரப்பா, உம்மன் சாண்டி, மாயாவதி என பல தலைவர்களுக்காக இவர் பல்வேறு இடங்களுக்கு சென்று யாகம் நடத்தியுள்ளார். உலக நலன் வேண்டி, 2008ல் பழனியில் யானை, குதிரை, பசுவை வைத்து மகா யோக சக்கர யாகம் நடத்தினார். அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
கொடைக்கானலில் இன்று முதல் நடத்தவுள்ள அஸ்வமேத யாகம் குறித்து அவர் கூறியதாவது:
நினைத்தது நிறைவேறுவதற்காக இந்த யாகம் நடத்தப்படுகிறது. இதுவரை கடல் மட்டத்திலிருந்து 1,500 அடி உயரத்தில் தான் இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளது. 5,000 அடி உயரத்தில் இந்த யாகம் நடத்தினால், மோடி மூன்றாவது முறையும் பிரதமர் தான் என்று எனக்கு தோன்றியது. அதன்படி கொடைக்கானலில் இந்த யாகம் நடத்துகிறேன். அன்றைய ராமனுக்கு ஆட்சி அமைக்க இந்த யாகம் எப்படி உதவி புரிந்ததோ, அது போன்று அந்த ராமனுக்கு கோவில் கட்டிய மோடிக்கு இந்த யாகம் பெரும் பயனை கொடுக்கும். அடித்துச் சொல்கிறேன், மூன்றாவது முறையும் மோடி தான் பிரதமர்.
இவ்வாறு அவர்கூறினார்.
வாசகர் கருத்து