ஜம்மு-காஷ்மீரின் திறமைக்கு மரியாதை கிடைக்கிறது: பிரதமர் மோடி நெகிழ்ச்சி
"வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க வளர்ச்சி அடைந்த ஜம்மு-காஷ்மீர் மிகவும் முக்கியமானது. நாட்டின் வளர்ச்சிக்கு ஜம்மு-காஷ்மீரின் பங்கு இன்றியமையாதது" என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக ஜம்மு காஷ்மீருக்கு பிரதமர் மோடி, இன்று வந்திருந்தார். ஸ்ரீநகரில் 6,400 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். பின், பக்சி ஸ்டேடியத்தில் நடந்த 'விக்சித் பாரத்... விக்சித் ஜம்மு காஷ்மீர்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரசும் அதன் கூட்டாளிகளும் 370வது பிரிவின் பெயரில் அரசியல் லாபங்களுக்காக ஜம்மு - காஷ்மீர் மக்களை தவறாக வழிநடத்தினர். இந்தப் பிரிவால் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே பயனடைந்தன என்ற உண்மையை ஜம்மு-காஷ்மீர் மக்கள் உணர்ந்து கொண்டனர். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 இல்லாததால் ஜம்மு-காஷ்மீரின் திறமைக்கு இன்று மரியாதை கிடைக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள மக்கள் தற்போது சுதந்திர காற்றை சுவாசிக்க துவங்கிவிட்டனர்.
பூமியின் சொர்க்கமான இந்த இடத்துக்கு வரும் உணர்வை விவரிக்க முடியாது. அது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. தேசத்தின் பிற பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட சட்டங்களை, ஜம்முவில் அமல்படுத்த முடியாத ஒரு காலகட்டம் இருந்தது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள சகோதர, சகோதரிகள் அதனால் கிடைக்கப் போகும் பலன்களை இழந்தனர்.
தற்போது மத்திய அரசால் ஒரே நேரத்தில் துவங்கப்பட்ட அனைத்து சட்டங்களின் வாயிலாக ஏழை எளிய மக்கள் பயனைடகின்றனர். காலம் மாறிவிட்டது. வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க வளர்ச்சி அடைந்த ஜம்மு-காஷ்மீர் மிகவும் முக்கியமானது. நாட்டின் வளர்ச்சிக்கு ஜம்மு-காஷ்மீரின் பங்கு இன்றியமையாதது.
இவ்வாறு மோடி பேசினார்.
வாசகர் கருத்து