தியாகராஜனுக்கு மோடி பாராட்டு; சிறப்பு சந்திப்பில் என்ன நடந்தது?
தமிழகத்தில் பிரதமர் மோடியின் கடந்த வார பயணத்தின்போது, மதுரையில் இருந்த தமிழக அமைச்சர் தியாகராஜனுக்கு, பிரதமர் அலுவலகம் சார்பில் இரவில் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி, பிப்., 27 ல்,பல்லடம் பொதுக்கூட்டத்திற்குப் பின், மதுரையில் தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் கருத்தரங்கில் பங்கேற்றார். அதன் பின் இரவு 8:00 மணிக்கு பசுமலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுவிட்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். ஹோட்டலில் இரவு தங்கி பிப்., 28ல் காலை துாத்துக்குடி பயணமானார்.
இந்நிகழ்ச்சிகளில் பிரதமரை மாநில அரசு சார்பில் வரவேற்கும் பொறுப்பு அமைச்சர் தியாகராஜனுக்கு வழங்கப்பட்டது. அதன்படி மதுரை வீரபாஞ்சான் பள்ளி ஹெலிபேடில் சென்று மோடியை வரவேற்று சால்வை அணிவித்தார். மறுநாள் துாத்துக்குடி சென்றபோது வழியனுப்பும் நிகழ்வில் தியாகராஜன் பங்கேற்பதாக இருந்தது.
ஆனால் மாநில அரசின் திருத்தப்பட்ட 'புரோட்டகால்' உத்தரவுப்படி பிப்., 27 இரவில் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பிய போது அங்கே சென்றும் பிரதமரை பார்த்துவிட்டு இரவில் வீடு திரும்பினார்.
இந்நிலையில், இரவு 10:30 மணிக்கு பிரதமர் அலுவலகம் சார்பில் அமைச்சர் தியாகராஜனுக்கு 'ஹைலி சீக்ரெட் மோஸ்ட் இம்பார்ட்டென்ட்' என்ற தகவலுடன் பிரதமரை சந்திக்க, சிறப்பு அழைப்பு டில்லியில் இருந்து விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காலையில் ஹோட்டலில் இருந்து பிரதமர் புறப்பட்டபோது, முதல் நபராக பிரதமரை சந்தித்தார். இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் நீடித்திருக்கும் எனத் தெரிகிறது. தொடர்ந்து பிரதமர் துாத்துக்குடிக்கு புறப்பட்டபோது, விமான நிலையம் சென்ற கான்வாயிலும் - டெயில் கார் 4வது வாகனமாக தியாராஜனுக்கு அனுமதி வழங்கப்பட்டது. விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் முருகனுக்கு பின் இரண்டாவது நபராக இருந்து பிரதமரை தியாகராஜன் வழியனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் தியாகராஜன் கூறியதாவது:
அந்த பயணத்தில் பிரதமரை நான் நான்கு முறை சந்தித்தேன். அவரை வரவேற்பதற்காக தமிழக அரசு எனக்கு இரண்டு முறை 'புரோட்டகால்' கொடுத்தது. முதலில் அனுப்பப்பட்ட புரோட்டகாலில் பிப்., 27ல் ஹோட்டலுக்கு சென்று பிரதமரை சந்திக்க வேண்டும் என்பது இல்லை. பிப்.,27 இரவு பிரதமர் அலுவலகம் விடுத்த சிறப்பு அழைப்பும் உண்மை. அப்போது மாநில அரசின் வழிகாட்டுதலையே பின்பற்றினேன்.
பிரதமர் அலுவலகம் எனக்கு சிறப்பு அழைப்பு விடுத்த விவரத்தை நான் தமிழக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்பதில்லை. அதன் நகல், பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழக தலைமைச் செயலருக்கும் சென்று விடும்.
பிரதமர் பயணத்தில் மாநில அரசின் 'புரோட்டகால் டெபுட்டி செக்ரட்டரி' ஒருவரும் இருப்பார். அவரும் எனக்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு குறித்து தகவல் தெரிவித்தார். பிரதமரிடம் அரசியல் பேசவில்லை. நான் மரியாதையாக அவரை வரவேற்றேன். அதற்காக என்னை 'தேங்க்யூ பாய்...தேங்க்யூ பாய்...' என தட்டிக்கொடுத்தார்.
பிரதமரை நான் சந்தித்த போட்டோவை எங்கும் வெளியிடவில்லை. ஆனால் ஒரு விவாதத்தின்போது பா.ஜ.,வினர் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுவிவகாரத்தை கிளப்பி விட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து