தமிழ் புத்தாண்டை புறக்கணிப்பவருக்கா ஓட்டு?
தமிழ் புத்தாண்டு அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், 'தமிழ் புத்தாண்டை புறக்கணித்த தி.மு.க.,வுக்கா உங்கள் ஓட்டு?' என, பா.ஜ., பிரசாரம் செய்து வருகிறது.
இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கடந்த 2006 - 2011 தி.மு.க., ஆட்சியில், தை முதல்நாள் தான் தமிழ் புத்தாண்டு என மாற்றப்பட்டது.
இதற்கு, தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. அடுத்து, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தமிழ் புத்தாண்டு வழக்கம் போல், சித்திரை மாதப் பிறப்பன்று கொண்டாட அறிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடி, தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் அதிகமான அன்பு வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு டில்லியில், மத்திய அமைச்சர் முருகன் வீட்டில் நடந்த தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, தமிழின் பெருமைகளை பேசினார்.
ஆனால், பிரதமர் மோடியை, தமிழ் மக்களுக்கு எதிரி போல் தி.மு.க., பிரசாரம் செய்கிறது.
ஹிந்துக்களின் ஓட்டுகளை பெறும் தி.மு.க., தலைவர்கள், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட தெரிவிப்பதில்லை.
வரும், 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. எனவே, 'தமிழ் புத்தாண்டை புறக்கணிக்கும் தி.மு.க.,வுக்கா உங்கள் ஓட்டு?' என்று, வீடுதோறும் துண்டறிக்கை வழங்கி, பா.ஜ.,வினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து