ஆண்களுக்கும் உரிமை தொகை: கனிமொழியிடம் வாலிபர்கள் அடம்
'எல்லாமே பெண்களுக்கு தானா, எங்களுக்கு எதுவும் இல்லையா? ஆண்களுக்கும் உரிமைத் தொகை வேண்டும்' என, கோவில்பட்டியில் பிரசாரம் செய்த கனிமொழி எம்.பி.,யிடம் வாலிபர்கள் கேள்வி எழுப்பினர்.
துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் தி.மு.க., சார்பில், இரண்டாவது முறையாக போட்டியிடும் கனிமொழி எம்.பி., தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். துாத்துக்குடி மாவட்டம், லிங்கம்பட்டியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட போது அவர் பேசியதாவது:
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி தி.மு.க., ஆனால், கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாதவர் பிரதமர் நரேந்திர மோடி.
'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் வங்கி கணக்கில் குறைந்த பணம் இருந்தால் அபராதம் விதிக்கும் முறை ரத்து செய்யப்படும். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும்; சம்பளம் 400 ரூபாயாக உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
'சம்பளமாக, 400 ரூபாய் வரவில்லை என்றால் உங்களிடம் தான் கேட்போம்' என்று கூட்டத்தில் இருந்த பெண்கள் சிலர் கேள்வி எழுப்பினர். உடனே, 'இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்ததும் 400 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்' என, அவர் பதில் அளித்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர்கள் சிலர், 'எல்லாமே பெண்களுக்கு தானா? ஆண்களுக்கும் உரிமைத் தொகை வழங்குங்கள்' என கேட்டதால் பிரசாரத்தில் பரபரப்பு நிலவியது.
அவர்களுக்கு பதில் அளித்து கனிமொழி பேசியதாவது:
எல்லா உரிமைகளும் ஆண்களுக்கு இருக்கு, அப்புறம் எதுக்கு ஆண்கள் உரிமைத் தொகை. எல்லா உரிமைகளையும் பெண்களிடம் கொடுத்து விடுங்கள். அப்புறம் ஆண்களுக்கு உரிமை தொகை கொடுப்போம், இங்கு யாரும் 'டம்மி' கிடையாது, எல்லாரும் ஒன்று தான்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
வாசகர் கருத்து