கோவை குண்டுவெடிப்பு கசப்பை பிரதமர் மோடி நினைவுபடுத்தியது சரியா, தவறா?

தி.மு.க., ஆட்சியில் இருந்தால், பயங்கரவாதம் நிச்சயமாக இருக்கும். தி.மு.க.,வும், பயங்கரவாதமும் எப்போதும் இணைந்தே பயணமாகும். எப்போதெல்லாம் தி.மு.க., ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு முன் நடந்த சம்பவத்தை, 'சிலிண்டர் விபத்து' என முதலில் கூறினர்; அதன்பின், மனித வெடிகுண்டு என மாறியது. இதை, சாதாரணமாக கடந்து விட முடியாது.

கடந்த, 1998ல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஏழு இஸ்லாமியர்கள் இறந்தனர். அவர்களுக்கும் சேர்த்தே, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

குண்டுவெடிப்பு சம்பவத்தை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்ள, பக்குவப்படுத்திக் கொள்ள, விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொள்வதற்காக நடத்தப்படுகிறது. உலகம் முழுதும் நடக்கிறது. இதிலென்ன அரசியல் இருக்கிறது?

பிரதமர் மோடி வருகிறார் என்றால், தமிழகத்தின் மீதான கவனம் இன்னும் அதிகரிக்கும். 1947க்குப் பின், ஒரு பிரதமர், 'ரோடு ஷோ' வாயிலாக நேரடியாக மக்களை சந்திக்கிறார். அதற்கு தி.மு.க., அரசு தடை விதிக்க முயன்றது. சின்ன சம்பவம் கூட நடக்கவில்லை. பிரதமரை பார்க்க மக்கள் ஆர்வமாக இருந்தனர்.

அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர். அதை மறைப்பதற்கு முயற்சி செய்தனர். பா.ஜ., அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது; அதை தடுத்து நிறுத்தப் பார்க்கின்றனர். மக்கள் அங்கீகாரம் இருந்தால் போதும்; யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

உலக தலைவராக மோடி மாறி விட்டார். தமிழுக்கு, தமிழகத்துக்கு மற்றும் தமிழருக்கு அதிகமாக செய்து கொண்டிருக்கிறார். பா.ஜ.,வால் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழும்.

-ஏ.பி.முருகாவந்தம் மாநில பொதுச் செயலர் பா.ஜ., திருப்பூர் தொகுதி வேட்பாளர்

குண்டுவெடிப்பு சம்பவங்களை திரும்ப திரும்ப நினைவூட்டுவது மக்களின் ஒற்றுமைக்கு ஒருபோதும் உதவி செய்யாது. நடந்ததை மறந்து, மனித சமுதாயம் எதிர்காலத்தை நோக்கி நகர்வதே சரியானதாக இருக்கும். அதில், பிரதமர் மோடி தவறி இருக்கிறார்.

தொழிலுக்காக, 1946ம் ஆண்டு சின்னியம்பாளையத்தில் தியாகிகள் நடத்திய போராட்டத்தால், துாக்கிலிடப்பட்டனர். அவர்களின் விருப்பத்துக்கேற்ப ஒரே குழியில் உடல்கள் புதைக்கப்பட்டன. அவர்களுக்கு செலுத்தும் அஞ்சலி என்பது, மக்களுக்காக நடத்திய போராட்டத்தில் உயிரிழந்தோருக்காக நடத்தப்படுவது.

இதேபோல், மின்கட்டண உயர்வை எதிர்த்து விவசாயிகள் போராடியபோது, துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். அது, ஒட்டுமொத்த விவசாயிகளுக்காக நடத்திய போராட்டம். அதன் காரணமாக, விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கிடைத்திருக்கிறது.

பிரதமர் என்பவர் நாட்டு மக்களுக்கு பொதுவானவர். அவர், குண்டுவெடிப்பு சம்பவத்தின் நினைவஞ்சலியில் பங்கேற்றது ஏற்புடையதல்ல.

கடந்த, 1997 நவ., 29ல் காவலர் செல்வராஜ் படுகொலை செய்யப்பட்ட பின் நடந்த கலவரம், பொருட்கள் சூறையாடல், வன்முறைகள் அதிகம். அப்போது, இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, 1998ல் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அதன்பின், 1998 மற்றும், 1999ல் நடந்த தேர்தலில், மதத்தின் பெயரால் பா.ஜ., வென்றது.

பழைய சம்பவங்களை மீண்டும் கிளறக்கூடாது. அதை கிளறி, ஆறாத புண்ணாக வைத்திருக்கக் கூடாது. நினைவுகளில் இருந்து அகற்ற வேண்டும். ஆனால், நினைவுத்துாண் அமைக்க வேண்டுமென கூறுகின்றனர். ஓட்டு வங்கி அரசியலை பிரதமர் முன்னின்று நடத்துகிறார். இது, ஏற்றுக் கொள்ள முடியாதது.

- சி.பத்மனாபன்மாநில குழு உறுப்பினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்