கிளை கழகத்தால் நெல்லையில் தொல்லை

திருநெல்வேலி லோக்சபா தொகுதி கடந்த சில லோக்சபா தேர்தல்களுக்கு முன் காங்., வசம் இருந்தது. அந்தத் தொகுதியில் தி.மு.க.,வுக்கு பலம் இருந்தும், கூட்டணி கட்சியான காங்.,க்கு ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என கேட்டு, லோக்கல் தி.மு.க.,வினர் கட்சித் தலைமைக்கு கேள்வி மேல் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, தொகுதியை கூட்டணி கட்சியான காங்.,க்கு விட்டுக் கொடுக்காமல், தி.மு.க.,வே போட்டியிடும் சூழலை அக்கட்சி தலைமை ஏற்படுத்தியது. கடந்த 2019 லோக்சபா தேர்தல் தி.மு.க., சார்பில் ஞானதிரவியம் என்ற கிறிஸ்துவ நாடாரை வேட்பாளர் ஆக்கினர்.

ஜெயலலிதா காலம் வரை, அ.தி.மு.க., கோலோச்சி வந்த இந்தத் தொகுதியில், அவருக்குப் பின் நடந்த தேர்தலில் தி.மு.க.,வின் ஞானதிரவியம் நிறைய ஓட்டு வித்தியாசத்தில் எதிர்தரப்பு வேட்பாளரை தோற்கடித்தார்.

பிரச்னை மேல் பிரச்னை



பெரிய அளவில் படிப்பு இல்லாத ஞான திரவியத்துக்கு சொத்துக்கள் அதிகம். கல்குவாரி தொழிலில் பிரதானமாக ஈடுபட்டு வந்த அவரும், அவர் குடும்பத்தினரும் எல்லா விஷயங்களிலும் அதிரடி காட்டினர்.

விதிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி அதிக ஆழத்துக்கு குவாரியை குடைந்து கல் எடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஞானதிரவியத்தை மையமாக வைத்து உருவாகிக் கொண்டே இருந்தன.

அவர் மகனும் தொகுதிக்குள் அதிரடியாக செயல்பட, சொத்துப் பிரச்னையில் பொக்லைன் ஏற்றி ஒருவரை கொல்லப் பார்த்தார் என்பது வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் அப்பா, மகன் மீது வரிசை கட்டின.

அதோடு, டயோசீசன் பிரச்னையில் கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை ஞானதிரவியம் அடித்தார் என்று சொல்லி, அவர் புகார் அளிக்க எம்.பி., மீது எப்.ஐ.ஆர்., போட வேண்டிய நிலை போலீசுக்கு ஏற்பட்டது. கைதில் இருந்து தப்பிக்க ஞானதிரவியம் முன் ஜாமின் பெற வேண்டியதானது.

இப்படி ஞானதிரவியத்தின் அதிரடிகளே நிறைய வரிசைகட்டி நிற்க, லோக்கல் தி.மு.க.,வினர் அதற்குமேல் வாண வேடிக்கை விட்டனர். குறிப்பாக, கட்சியின் எம்.எல்.ஏ.,வும் முன்னாள் மா.செ.,வுமான அப்துல் வஹாப், தொழில் நிறுவனத்தோடு போட்டி போட்டு, நிறுவன வாசலில் பஸ் ஸ்டாப் கட்ட வைத்தார் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் அணிவகுத்தன.

அதேபோல, திருநெல்வேலி மாநகர மேயர் சரவணன், கான்ட்ராக்டர்கள், கவுன்சிலர்கள் என்று பிரச்னை மேல் பிரச்னை செய்ய, நெல்லை மாநகரமே அந்தலை சிந்தலையானது.

இப்படி தி.மு.க.,வின் அனைத்து மட்டங்களிலும் நெல்லை தொல்லையாகிப் போனதால், இம்முறை தொகுதி கைவிட்டுப் போய்விடும் என கட்சித் தலைமைக்கு உளவுத் துறை ரிப்போர்ட் கொடுத்தது.

இதனால், இம்முறை தொகுதியை காங்கிரசுக்கு நைசாக தள்ளிவிட்டு விட்டது தி.மு.க., ஆனாலும், அங்கேயும் பிரச்னை என்றதும், தி.மு.க., அதிர்ச்சி அடைந்துள்ளது.

'என்னடா கிளைக் கழகத்துக்கும் வந்த சோதனை' என கட்சியினர் புலம்ப துவங்கி உள்ளனர்.

காங்.,கிலும் கலகம்



இதுகுறித்து தி.மு.க., தரப்பில் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக திருநெல்வேலியை காங்கிரசார் மறந்து போயிருந்தனர். இந்த நேரம் பார்த்து, காங்.,க்கு தொகுதி ஒதுக்கப்பட்டதை அடுத்து, செலவழிக்கும் தகுதியுள்ள காங்கிரஸார், வாய்ப்பு கேட்டு டில்லி காங்., அலுவலகத்தில் முற்றுகையிட்டுள்ளனர்.

திருநெல்வேலியில் சிட்டிங் எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன், பா.ஜ.,வில் சீட் கேட்டிருப்பதைப் போல நாங்குநேரி சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் 'சீட்' கேட்டு வருகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தனது மகளுக்கும், முன்னாள் எம்.பி., எஸ்.எஸ்.ராமசுப்பு தனக்கும் சீட் கேட்கின்றனர். எம்.எல்.ஏ., ரூபி மனோகரனின் மகனுக்காக சீட் கேட்கப்படுவதாகவும் தகவல் உள்ளது.

தென்காசி பகுதியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்சும், சீட் கேட்டு காய் நகர்த்துகிறார். ஆனால், அவர் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக உள்ளதால், அவருக்கு மேற்கொண்டும் அந்தஸ்தான வாய்ப்பு கொடுக்கக் கூடாது என காங்கிரஸாரே மல்லுக்கு நிற்கின்றனர்.

ஏற்கனவே இரண்டு முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள தொகுதிதான் நெல்லை. அதை வைத்து, தற்போதும் தி.மு.க., கூட்டணி பலத்தில் ஜெயித்து விடலாம் என நம்புகின்றனர்.

வாய்ப்பு பெறுவதற்குள்ளாகவே, வாய்ப்பு கேட்கும் மற்றவர்கள் மீது ஒவ்வொருவரும் அவதுாறு சொல்லும் நிலையில், ஒருவருக்கு சீட் கிடைத்த பின், மற்றவர்கள் என்ன செய்யப் போகின்றனரோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க.,வின் கிளைக் கழகம் காங்கிரஸ் என பொதுவான விமர்சனம் இருந்தாலும், அக்கட்சி கோஷ்டி பூசலால் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், அது தி.மு.க.,வைத்தான் மொத்தமாக பாதிக்கும் என்பது பெரும் கவலையாக உள்ளது.

இவ்வாறு அத்தரப்பில் கூறினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)