இதுவரை நடந்தது டிரெய்லர் மட்டும் தான்: பிரதமர் மோடி
"நாட்டின் வளர்ச்சியில் ரயில்வேயின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது. ஆனால், முன்பு ஆட்சி செய்தவர்கள் அதனை முறையாக கவனிக்கவில்லை" என, பிரதமர் மோடி தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் சபர்மதியில் ரூ.85,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் மற்றும் நாடு முழுவதும் 1.06 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
பின், பிரதமர் மோடி பேசியதாவது:
பா.ஜ., அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை தேர்தல் கண்ணோட்டத்தோடு செயல்படுவதாக சிலர் பார்க்கின்றனர். நாட்டை முன்னோக்கி செல்லும் நோக்கத்தில் ஒரு பகுதியாகவே மத்திய அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
நம் நாட்டின் வளர்ச்சியில் ரயில்வேயின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கிறது. ஆனால், முன்பு ஆட்சி செய்தவர்கள் அதனை முறையாக கவனிக்கவில்லை.
இந்தாண்டில், கடந்த 2 மாதத்தில் மட்டும் நாட்டை வளர்ச்சியாக்கும் முயற்சியில் 11 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி உள்ளோம். மிக மோசமான சூழலில் இருந்த ரயில்வே துறையை மீட்க மத்திய அரசு திறம்பட செயல்பட்டு வருகிறது.
ரயில்வே துறையை மேம்படுத்தவே தனி ரயில்வே பட்ஜெட் நிறுத்தப்பட்டு பொது பட்ஜெட் உடன் இணைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான அரசு, ஆட்சியில் இருக்கும் போது ரயில் பாதைகளை இரட்டிப்பாக்குவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
350 ஆஸ்தா ரயில்களின் வாயிலாக 4.5 லட்சம் பயணிகள், அயோத்திக்கு செல்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டில் இன்றைக்கு வந்தே பாரத் போன்ற தரமான வசதிகளுடன் அதிநவீன ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்வே துறையை நவீன மயமாக்குவது, விரிவாக்குவது என பல திட்டங்களை மத்திய அரசு செய்து வருகிறது. இது போல மத்திய அரசு வளர்ச்சிப் பணிகளில் செயல்படுவதை தேர்தலுக்காக செய்வதாக பேசுகின்றனர். மக்களின் நலனுக்காக வளர்ச்சிப் பணிகளில் மட்டுமே மத்திய அரசு முழு நோக்கத்துடன் பணியாற்றி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் நடந்தது எல்லாம் வெறும் டிரெய்லர் மட்டும் தான். முன்பு நாம் சந்தித்த துன்பங்களை நம் வருங்கால தலைமுறை சந்திக்கக் கூடாது. இது மோடியின் உத்திரவாதம்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து