Advertisement

இருந்த பொழப்பும் போச்சு: ஊரெல்லாம் இதே பேச்சு!

முன்பெல்லாம் தேர்தல் என்றால், 'போடுங்கம்மா ஓட்டு; சின்னத்தை பார்த்து' என்ற கோஷங்கள் தெருவெங்கும் எதிரொலிக்கும். வேட்பாளர்கள் படை சூழ, ஓட்டு கேட்டு செல்வர். வழி நெடுகிலும் கொடி, தோரணங்கள் என, வீதிகள் களை கட்டும். திருவிழா போல் தேர்தல் கொண்டாடப்பட்டது. திருவிழாவில் பல்வேறு தொழில் செய்வோர் பிழைப்பது போல், தேர்தலில் ஏராளமானோர் பயனடைந்தனர்.

காலம் மாறி காட்சியும் மாறிவிட்டது. திருவிழாவாக நடந்த தேர்தல், சம்பிரதாய சடங்காக நடக்கிறது.

காரணம், தேர்தல் கமிஷனின் அதீத கெடுபிடி.

வழக்கமாக, சுவர் ஓவியம் வரைவது, போஸ்டர் மற்றும் தோரணம் அச்சடிப்பது, சமையல், வாடகை வாகனம் உள்ளிட்ட சில தொழில்கள் களைகட்டும். தேர்தல் கமிஷனின் கடுமையான விதிகளால் அவை எல்லாம் தலையே துாக்கவில்லை. மற்றொரு பக்கம் தேர்தல் சம்பந்தமில்லாத தொழில்களும் முடங்கி உள்ளன. காரணம் பறக்கும் படையின் வரன்முறையில்லாத கெடுபிடி.

1 சிவகங்கை மாவட்டம், செவ்வூர் கிராமத்தில், டீக்கடையில் அமர்ந்து, ராமன், 62, என்பவர் பணத்தை எண்ணிக் கொண்டு இருந்தார். பக்கத்து ஊரில், மாரியம்மன் கோவில் திருவிழா முடிந்து, மீதம் இருந்த 56,950 ரூபாய் அது. அந்த பக்கமாக போன பறக்கும் படையினர் பறிமுதல் செய்துவிட்டனர். பக்தர்களிடம் இருந்து வசூல் செய்ததற்கான ரசீது புத்தகத்தை அவர்களிடம் காண்பித்தும் மசியவில்லை

2 சென்னை அடுத்த மேல்மருவத்துாரில், கடை தெருவில் தங்கள் வாகனங்களை நிறுத்தி, பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டதால், அங்கு உள்ள கடைகளை வாடிக்கையாளர்கள் தவிர்த்தனர். இதனால், வியாபாரிகளுக்கும் பறக்கும் படையினருக்கும் வாக்குவாதம் வெடித்தது.

தினம் தினம் இது போன்ற பல காட்சிகள் அரங்கேறுகின்றன. 50,000 ரூபாய்க்கு மேல் வைத்திருந்தால் பிடித்து விடுகின்றனர். எந்த ஆவணத்தை காண்பித்தாலும் அது உரிய ஆவணம் இல்லை என்கின்றனர். வங்கி ரசீது வேண்டும். வாழை விற்கும் விவசாயிக்கு ஏது வங்கி ரசீது?

ஒரு சவரன் தங்கம் விலை, 50,000த்தை தாண்டிவிட்டது. கல்யாணம் காட்சிக்கு நகை, புடவை வாங்குபவர்கள் என்ன செய்வர்? தேர்தல் கமிஷனிடம் பதில் இல்லை. வரம்பை 2 லட்சமாக உயர்த்த வேண்டும், கெடுபிடிகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு தேர்தல் கமிஷன் பாராமுகமாக உள்ளது.

அவரவர் அனுபவிக்கும் அவஸ்தை பற்றி, அவர்களுடைய குரலில்...

கட்டுமான பணிகள் பாதிப்பு



கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன்: கட்டுமானத் துறையில் பல்வேறு நிலைகளில், 'டிஜிட்டல்' முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட சில நிகழ்வுகளில் ரொக்க பணம் எடுத்து செல்வது அவசியமாகிறது.

செங்கல், மணல் உள்ளிட்ட பொருட்களை, சிறிய நிறுவனங்களிடம் இருந்து வாங்கும்போது ரொக்க பணம் அவசியமாகிறது. தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் கெடுபிடியால், கட்டட பணிகள் முடிய தாமதமாகின்றன.

தேர்தலுக்கு பணம் எடுத்து செல்வதற்கான வாய்ப்பே இல்லாத அப்பாவி மக்களை, சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். இதனால், வீடு கட்டுவோர், கட்டுமான ஒப்பந்ததாரர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

40 சதவீத வருவாய் இழப்பு



சென்னை சுற்றுலா வாகன உரிமையாளர் சங்க பொதுச்செயலர் சுகுமார்: தமிழகத்தில் ஓடும் வாடகை சுற்றுலா வாகனங்களில், 60 சதவீதம் தனியார் பெரு நிறுவனங்களை நம்பி உள்ளன. அவர்களின் பயன்பாட்டிற்காக, வாகனங்களை இயக்கி வருகிறோம். இவை தவிர, 40 சதவீத வாகனங்களை, ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல், பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கி வருகிறோம்.

வழக்கமாக, இந்த மாதம் இறுதியில் இருந்தே சீசன் துவங்கி விடும். அடுத்த இரண்டு மாதங்கள், சுற்றுலாவுக்கு சாதகமாக இருக்கும். எங்களுக்கு ஓரளவுக்கு வருமானமும் கிடைக்கும். தற்போது நகரங்களிலும், நெடுஞ்சாலைகளிலும் சோதனை கெடுபிடி அதிகரித்துள்ளது.

குடும்பத்தோடு சுற்றுலா செல்வோருக்கு, இது சிரமத்தை ஏற்படுத்துகிறது. சுற்றுலா செல்வோர் கடந்த சில நாட்களாக முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். இதனால், எங்களுக்கு 40 சதவீதம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நகை விற்பனை 50 சதவீதம் சரிவு



சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி: தமிழகத்தில், 3,000 பெரிய நகை கடைகள்; 8,000 நடுத்தர கடைகள், 22,000 சிறிய கடைகள் உள்ளன. சிறிய கடைகளில் ரொக்கமாக பரிவர்த்தனை நடக்கிறது. ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு வாகனத்தில் நான்கு பேர் சென்றாலும் ஒட்டுமொத்தமாக, 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்து செல்ல கூடாது என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

தற்போது, ஒரு சவரன் தங்கம் விலை, 50,000 ரூபாய். இது வரி, செய்கூலி எல்லாம் சேர்த்தால், 60,000 ரூபாயாக வந்து விடும். தேர்தல் கமிஷன் கெடுபிடியால், ஒரு சவரன் நகை வாங்க கூட பணம் எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால், நகை தொழில் பாதிக்கப்பட்டு, விற்பனை, 50 சதவீதம் குறைந்து விட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனை உள்ள கடைகளில் மட்டும் தான் வியாபாரம் உள்ளது. ரொக்க பண பரிவர்த்தனை உள்ள சிறிய கடைகளில் வியாபாரம் முடங்கி விட்டது.

மத்திய அரசு, வேறு எந்த தொழிலுக்கும் இல்லாமல் தங்கத்திற்கு மட்டும், இரண்டு லட்சம் ரூபாய் வரை ரொக்க பணமாக கொடுத்து, வாங்க சிறப்பு சலுகை வழங்கியுள்ளது. அப்படி இருக்கும்போது, தேர்தல் ஆணையம் பொதுவான கட்டுப்பாடுகளை விதிப்பது எப்படி நியாயமாக இருக்கும்?

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தான் நகை விற்பனை நன்கு இருக்கும். நகை தொழிலில் பொற்கொல்லர்கள், நகை கடை விற்பனையாளர்கள் என, நேரடியாக 5 லட்சம் பேரும்; நகை பெட்டி செய்து தருவது என மறைமுகமாக, ஐந்து லட்சம் பேரும் வேலை செய்கின்றனர். நகை விற்பனை முடக்கத்தால், அனைவருக்கும் வேலை பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு பெரிய நகை நிறுவனம், தன் கிளை நிறுவனங்களுக்கு நகைகளை அனுப்பும்போது, எந்தெந்த ஆவணங்கள் இருக்க வே்ணடும் என்பதை, ஆணையம் தெரிவிக்க வேண்டும். நாங்கள் அனுப்புவதில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள நகைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இது ஏற்புடையதல்ல.

'பேனர்' தொழில் முடக்கம்



சென்னை, ராயப்பேட்டையை சேர்ந்த மேஸ்திரி பரமேஸ்வரன்: சென்னையில், பேனர் வைப்பது, கொடி கம்பங்கள் நடுவது, சாரம் கட்டுவது போன்ற தொழிலில், 3,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளோம். 15 அடி அகலம், 10 அடி நீளத்தில் பேனர் வைக்க, 3,500 ரூபாய் வரை கேட்போம்.

ஒரு கொடி கம்பம் நட, 60 ரூபாய் கூலி வசூலிப்போம்.

தற்போது தேர்தல் கமிஷன், பொது இடங்களில் பேனர் வைக்கக் கூடாது; கொடிக் கம்பம் நடக் கூடாது என, சொல்கிறது. அரசியல்வாதிகளும் முறையாக அனுமதி பெறுவது இல்லை. கண்ட இடங்களில் பேனர் வைக்கச் சொல்லி, எங்களை பலிகடாவாக்கி விடுகின்றனர்.

மேலும், அரசியல் கட்சியினர், ஏதாவது ஒரு இடத்தில் மட்டும் பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்தி விடுகின்றனர். இதனால், சிலருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. எங்களை போன்ற நபர்களுக்கு வேலை தருவது இல்லை. தேர்தல் என்பது எங்களுக்கான சீசன். தற்போது, தேர்தல் கமிஷன் கெடுபிடி காரணமாக, பலர் மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர். திடீரென பேனர் வைக்க வேண்டும்; கொடிக் கம்பம் நட வேண்டும் என, அரசியல் கட்சியினர் அணுகினால், வேலை ஆட்களை கூப்பிட முடியவில்லை.

ரூ.2 லட்சம் எடுத்து செல்ல அனுமதி



தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா: தேர்தல் நடத்தை விதிமுறைகளால், வணிகர்கள், விவசாயிகள், பொது மக்கள், சுற்றுலாப் பயணியர், மருத்துவ நோயாளிகள், கல்லுாரி மாணவர்கள், சுப நிகழ்ச்சி நடத்துவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இதே நிலை நீடிக்குமானால், தேர்தல் முடியும் வரை, தமிழகம் முழுதும் கடையடைப்பை தவிர வேறு வழியில்லை. இதற்கு தீர்வு காண, இரண்டு லட்சம் ரூபாய் வரை ரொக்கப்பணம் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும்.

இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்களை, உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஏப்., 19க்கு பின், தேர்தல் நடைமுறைகளை தளர்த்தி, ரொக்கப் பணம் எடுத்து செல்வதற்கான உச்சவரம்பை தளர்த்த வேண்டும்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்